இறைச்சி கழிவால் சுகாதார சீர்கேடு
வாலாஜாபாத், :வாலாஜாபாத் புறநகர் சாலைக்கான பிரிவு பகுதி யில், நேரு நகருக்கு செல்லும் சாலை உள்ளது. இச்சாலை வழியாக, வாலாஜாபாத் 15வது வார்டில் உள்ள பச்சையம்மன் கோவிலுக்கு பக்தர்கள் தினசரி வழிபாட்டிற்கு செல்கின்றனர்.இந்நிலையில், சில மாதங்களாக பச்சையம்மன் கோவில் தெருவின்இருபுறமும் கோழி இறைச்சி கழிவு அதிக அளவில் கொட்டப்பட்டு வருகின்றன.வாலாஜாபாத் பஜார் வீதியில் இறைச்சி கடை வைத்துள்ள வியாபாரிகள், இத்தகைய செயலில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இதனால் துர்நாற்றம் ஏற்படுவதோடு இறைச்சி கழிவு கலந்த நீர் சாலையில் வழிந்து மாசாகிறது.மேலும், சாலை ஓரத்தில் குவிந்த கழிவை தெரு நாய்கள் இழுத்து வந்து சாலை முழுக்க பரப்புவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.எனவே, இச்சாலையோர பகுதிகளில் இறைச்சி கழிவு கொட்டப்படுவதை தடுக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.