வழிந்தோடும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
காஞ்சிபுரம்:பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு அடிக்கடி சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால், வணிகர் வீதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.காஞ்சிபுரம் பல்லவர்மேடு, பிள்ளையார்பாளையம், தாத்திமேடு பகுதியில் இருந்து பள்ளி, கல்லுாரி, அலுவலகம், பேருந்து நிலையம் செல்வோர் வணிகர் வீதி வழியாக சென்று வருகின்றனர்.இப்பகுதியில், திருமண மண்டபம், தனியார் மருத்துவமனை, விவசாயத்திற்கு தேவையான விதை, உரம், உபகரணம் விற்பனை செய்யும் கடை, எண்ணெய் செக்கு ஆலை உள்ளிட்டவை இயங்கி வருகிறது.இதனால், வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் நிறைந்த இத்தெருவில், அடிக்கடி பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவுநீர் வழிந்தோடுகிறது.இதனால், சாலையில் நடந்து செல்வோர் கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டது. வேகமாக செல்லும் வாகனங்களால் கழிவுநீர் தெளிப்பதால், பாதசாரிகள் மனஉளைச்சலுக்கு ஆளாகினர். தொடர்ந்து வெளியேறும் கழிவுநீரால் வணிகர் வீதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.எனவே, வணிகர் வீதியில், பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை முழுதும் நீக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.