காமாட்சியம்மன் கோவில் சுற்றி ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரிப்பு
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்திற்கு வரும் சுற்றுலா பயணியர் பலரும், காமாட்சியம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்கின்றனர். தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் இரவு வரை இக்கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.குறிப்பாக, அரசியல் பிரமுகர்கள், அரசு உயரதிகாரிகள், அமைச்சர்கள் என, நாடு முழுதும் இருந்து முக்கிய பிரமுகர்கள் வருகின்றனர். பக்தர்கள் எளிதாக வந்து செல்ல ஏதுவாக, மாநகராட்சி சார்பில் முன்னேற்பாடு நடவடிக்கைகள் போதுமான அளவு இல்லாததால், கோவிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்பு கடைகளால், பக்தர்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.ஏற்கனவே, திருநங்கையர் தொல்லை அதிகமாக உள்ள நிலையில், ஆக்கிரமிப்பு கடைகளால், அன்றாடம் பக்தர்களுக்கு இடையூறாக உள்ளது. மேலும், நடப்பதற்கு கூட இடமில்லாமல், பக்தர்கள் சிரமப்படுகின்றனர். நடைபாதை முழுதும் கடைகளான நிலையில், சாலையின் பெரும் பகுதியும் கடைகளாக மாறிவிட்டன. கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்கள் நிறுத்த முடியாத நிலை உள்ளது. கோவிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்பு கடைகளை, மாநகராட்சி நிர்வாகம் அகற்ற வேண்டும். அதேபோல், திருநங்கையர் பலரும், பக்தர்களிடம் பணம் கேட்டு தொந்தரவு அளிப்பதை தடுக்க, போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.