பி.டி.ஒ., அலுவலக பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க வலியுறுத்தல்
உத்திரமேரூர்:உத்திரமேரூர் -- புக்கத்துறை நெடுஞ்சாலை, உத்திரமேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட, அருணாச்சலப்பிள்ளை சத்திரம் கிராமம் உள்ளது. இங்கு செல்லும் நெடுஞ்சாலையில் பி.டி.ஒ., அலுவலக பேருந்து நிறுத்தம் உள்ளது.இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி அப்பகுதிவாசிகள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். அதேபோல, உத்திரமேரூர் சுற்றுவட்டார கிராமத்தினர் இப்பேருந்து நிறுத்தத்தின் வாயிலாக, பல்வேறு பணிகள் நிமித்தமாக பி.டி.ஒ., அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர்.இந்நிலையில், இங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை இல்லாமல் உள்ளது. இதனால், பேருந்துக்காக வரும் பயணியர், மழை மற்றும் வெயில் நேரங்களில் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.எனவே, பி.டி.ஒ., அலுவலக பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க, பேரூராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.