காஞ்சி மாநகராட்சி குப்பை கிடங்கு அடிக்கடி எரியும்...மர்மம்:அளவை குறைக்க தீ வைக்கப்படுவதாக குற்றச்சாட்டு
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் நத்தப்பேட்டை குப்பை கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால், வேண்டுமென்றே தீ வைத்து எரிக்கப்படுவதாக பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது. மட்காத குப்பை டன் கணக்கில் குவிந்து கிடப்பதால், தீ விபத்து நடக்கும் சம்பவங்கள் சதியாக இருக்குமோ என, சந்தேகம் எழுந்துள்ளது.காஞ்சிபுரம் மாநகராட்சியில், நான்கு மண்டலங்களின் கீழ், 51 வார்டுகளில், 1,000க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இந்த தெருக்களில் உள்ள வீடுகளிலும், வணிக கட்டடங்களில் இருந்து சேகரமாகும் குப்பையை சேகரிக்கும் பணி, தனியார் நிறுவனத்திடம் மாநகராட்சி நிர்வாகம் ஒப்படைத்துள்ளது.இங்கு சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளின் எடைக்கு ஏற்ப, தனியார் நிறுவனத்திற்கு மாநகராட்சி நிர்வாகம் பணம் வழங்குகிறது. அந்த வகையில், ஒரு நாளைக்கு 70 டன்னுக்கு மேல் குப்பை சேகரித்து அகற்றப்படுகிறது.குப்பை எடைக்கு ஏற்ப தனியார் நிறுவனத்திற்கு மாநகராட்சி நிர்வாகம் பணம் வழங்குகிறது. அதன்படி, மாதந்தோறும் 80 லட்சம் ரூபாய்க்கு மேல் தனியார் நிறுவனத்திற்கு கொடுக்கப்படுகிறது.லட்சக்கணக்கான ரூபாய் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படும் நிலையில், அதை தரம்பிரித்து, முறையாக அகற்றப்படுத்துவதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு தொடர்ந்து எழுகிறது.மட்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கவும், மட்காத குப்பையை சிமென்ட் தயாரிப்பு போன்ற தொழில் நிறுவனங்களுக்கும் வழங்கப்படுகிறது. ஆனால், மட்காத குப்பையை சிமென்ட் நிறுவனங்களுக்கு கொடுப்பதில்லை எனவும், அது தொடர்பான ஆவணங்களும் முறையாக பராமரிக்கப்படுவது இல்லை என, கவுன்சிலர்கள் சிலர் குற்றஞ்சாட்டுகின்றனர்.குப்பை தொடர்பான 'டெண்டர்' பிரச்னை தொடர்ந்து எழும் நிலையில், நத்தப்பேட்டையில் மலைபோல் குவிந்து கிடக்கும் கழிவுகள், திடீரென தீப்பிடித்து எரிவதால் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. டன் கணக்கில் தேங்கி கிடக்கும் குப்பை அடிக்கடி தீப்பற்றி எரிவதால், சுற்றியுள்ள இடங்களில் வசிப்போர் புகையால் அவதிப்படுகின்றனர்.குப்பையை சிலர் வேண்டுமென்றே எரிப்பதாகவும், அதன் அளவை குறைக்க திட்டமிட்ட சதி நடப்பதாகவும் பலரும் சந்தேகிக்கின்றனர். கடந்த 13ம் தேதி நத்தப்பேட்டை குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தை போராடி மாநகராட்சி ஊழியர்கள் அணைத்தனர்.அதைத் தொடர்ந்து, கடந்த 23ம் தேதி இரவு குப்பை கிடங்கில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். குப்பை கிடங்குக்கு தொடர்ந்து தீ வைக்கப்படுவதால், இந்த விவகாரத்தில் மர்மம் நீடிக்கிறது.காஞ்சிபுரத்தில், 12 இடங்களில் குப்பையை நுண் உரமாக்கும் மையங்களும், ஐந்து இடங்களில் வள மீட்பு மையங்களும் உள்ளன. இந்த இடங்கள் குப்பையை தரம் பிரிப்பதற்கும், அதிலிருந்து உரம் தயாரிக்கவும் அமைக்கப்பட்டன.இந்த மையங்கள் சரிவர இயங்காத நிலையில், பராமரிப்பு பணி செய்ய 20 லட்சம் ரூபாய்க்கும், பதிவேடுகள் வாங்கவும், 3 லட்சம் ரூபாய் தேவை என, சமீபத்தில் நடந்த மாநகராட்சி கூட்டத்தில் தான் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.குப்பை கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால், சுற்றியுள்ள பகுதியில் வசிப்போர் பாதிக்கின்றனர். புகைமூட்டத்தால் பகுதி முழுதும் மாசடைவதால், மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நகரவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடந்த 2021ல், இதேபோல் குப்பை கிடங்கு எரிந்து தீ விபத்து ஏற்பட்டதால், 93 லட்சம் ரூபாய் அபராதம் மாநகராட்சிக்கு விதிக்கப்பட்டது. அந்த தொகையே இன்னும் மாநகராட்சி நிர்வாகம் செலுத்தாமல் உள்ளது. இந்நிலையில், மீண்டும் குப்பை கிடங்கில் தீ விபத்து அடுத்தடுத்து ஏற்படுகிறது.குப்பை விவகாரத்தில், போதிய பேட்டரி வாகனங்களும், லாரி, சரக்கு வாகனங்கள், ஊழியர்கள் பற்றாக்குறை போன்ற பிரச்னைகள் தொடர்ந்து நீடிக்கிறது. இதுதொடர்பாக, மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பியும், மாநகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள் கண்டுகொள்வதாக இல்லை.நத்தப்பேட்டை குப்பை கிடங்கு வேண்டுமென்றே தீ வைக்கப்படுவதாக எழும் குற்றச்சாட்டுகளை தவிர்க்கும் வகையில், தீ விபத்து ஏற்படாமல் இருக்க மாநகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நத்தப்பேட்டை மற்றும் திருக்காலிமேடு பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர்.குப்பை தீ விபத்து தொடர்பாக, உதவி பொறியாளரை விசாரிக்க உத்தரவிட்டு உள்ளேன். விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.புருஷோத்தமன்,மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர்,காஞ்சிபுரம்.
'டெண்டர்' பின்புலத்தில் தி.மு.க., நிர்வாகிகள்?
குப்பை அகற்றுவதிலும், அது சம்பந்தமாக பணிகளும் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என, கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்னர். தற்போது, குற்றச்சாட்டு தெரிவிக்கும் கவுன்சிலர்கள், முந்தைய ஆண்டுகளில் ஏன் மவுனம் காத்தனர் என, சில கவுன்சிலர்கள் கேட்கின்றனர். குப்பை அகற்றும் தனியார் நிறுவன டெண்டர் விவகாரத்தின் பின்புலத்தில், கடந்தாண்டுகளில் தி.மு.க., நிர்வாகிகள் இருந்தனர். அப்போது, இதே குப்பை பிரச்னையை நேரடியாக எழுப்பாமல், ஒப்பந்த பணியில் இருந்து வெளியே வந்த பின், தற்போது குரல் எழுப்புகின்றனர் என, கவுன்சிலர்கள் சிலரும் தங்களது ஆட்சேபனையை தெரிவிக்கின்றனர்.