நிலத்தை வாங்க, விற்க முடியாமல் காஞ்சி மக்கள்... திண்டாட்டம்: அதிகாரிகள் அலட்சியத்தால் பட்டாவில் குழப்பம்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் நில ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கலின்போது, பட்டா பதிவில் அதிகாரிகள் செய்த தவறால், நிலத்தை வாங்கவோ, விற்கவோ முடியாமல் மக்கள் திணறுகின்றனர். திருத்தம்கோரி விண்ணப்பித்தாலும், சரிசெய்யாமல் அதிகாரிகள் அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தமிழகம் முழுதும் வருவாய் துறையில் பட்டா, வரைபடம், சிட்டா அடங்கல் என, அனைத்து ஆவணங்களும், பல ஆண்டுகளுக்குமுன், டிஜிட்டல் மயமாகிவிட்டன.காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் நிலங்களின் விபரங்களை, நகர நில வரித்திட்டத்தின் கீழ், தனி வட்டாட்சியர் வாயிலாக, ஒவ்வொரு சர்வே எண்ணையும் டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் நடந்தன.தனி வட்டாட்சியர், சர்வேயர், உதவியாளர் இதற்கென ஒரு குழுவே செயல்பட்டு வந்தது. இதன்படி, 16,000க்கும் மேற்பட்ட சர்வே எண்களின் சொத்து விபரங்கள், நான்கு வார்டுகளாக பிரிக்கப்பட்டு, ஆன்லைனில் மாற்றும் பணிகள் இரு ஆண்டுகளுக்கு முன் முடிந்தது.இதில், பிள்ளையார்பாளையம் பகுதியில் உள்ள சேர்மன் சாமிநாதன் தெருவில் உள்ள 200க்கும் மேற்பட்டோரின் பட்டா விபரங்கள் பிழையாக ஆன்லைனில் பதிவாகியுள்ளது. இ - சேவை மையம்
அதாவது, சேர்மன் சாமிநாதன் தெரு என்பதற்கு பதிலாக, மாதனம்பாளையம் தெரு என பதிவாகி உள்ளது. வருவாய் துறையினர் பதிவின்போது செய்த பிழையை அவர்களே திருத்தம் செய்து கொடுத்திருக்க வேண்டும்.ஆனால், பட்டாதாரர்கள் ஒவ்வொருவரும் திருத்தம் கோரி, இ - சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் என, வருவாய் துறையினர் தெரிவிக்கின்றனர்.அதுமட்டுமின்றி, பட்டாவில் திருத்தம் கோரியவர்களின் விண்ணப்பங்களை பரிசீலிக்காமல், இழுத்தடித்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.வருவாய் துறையினர் செய்த பிழையால், பட்டாதாரர்களால் தங்கள் சொத்துக்களை விற்க முடியாமலும், வங்கிகளில் அடமானம் வைக்க முடியாமலும் அவதிப்படுகின்றனர். ஆன்லைன்
பட்டா விபரங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்தபோது, இந்த பிழை ஏற்பட்டிருப்பதாக, வருவாய் துறையினர் தெரிவிக்கின்றனர்.பிள்ளையார்பாளையம் மட்டுமின்றி, சின்ன காஞ்சிபுரம், பெரிய காஞ்சிபுரம் என நகரின் பல்வேறு இடங்களில், பட்டா விபரங்கள் சரியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என, நகரவாசிகள் கேள்வி எழுப்புகின்றனர்.இதுகுறித்து, வருவாய் துறை சர்வேயர் ஒருவரிடம் கேட்டபோது, 'இ - சேவை மையம் வாயிலாக பட்டா திருத்தம் கோரி விண்ணப்பம் செய்ய வேண்டும். அவ்வாறு விண்ணப்பபித்த உடன் பரிசீலித்து, சரி செய்து கொடுப்போம்' என்றார்.மீண்டும் மீண்டும் அல்லாடும் மக்கள்கடந்த 1979 முதல் 1987 வரை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல ஊரக பகுதிகளில், 'யுடிஆர்' எனப்படும் நில பதிவேடு புதுப்பிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அப்போது, பட்டா பதிவில் வருவாய் அதிகாரிகள் செய்த பிழையால், மக்கள் பல ஆண்டுகளாக திருத்தம் கோரி அலைந்து வருகின்றனர். தற்போது, ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கலின்போது, வருவாய் அதிகாரிகளின் கவனக்குறைவால் ஏற்பட்ட தவறுக்கு காஞ்சிபுரம் மக்கள் மீண்டும் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.