மாநில இறகு பந்து போட்டி காஞ்சி மாணவர்கள் தேர்வு
காஞ்சிபுரம்:களியனுார் மஹாத்மா காந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ -- மாணவியர், மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெற்று, மாநில அளவிலான இறகு பந்து போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில், மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டி நேற்று நடந்தது. இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆறு குறுவட்ட அளவில் நடந்த போட்டியில் வெற்றி பெற்று, முதல் இடம் பிடித்த ஆறு பள்ளிகள் பங்கேற்றன. இதில், 14 வயதுக்கு உட்பட்டோர் இரட்டையர் பிரிவில், காஞ்சிபுரம் களியனுார் மஹாத்மா காந்தி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் துருவன், சர்வேஷ் ஆகியோர் வெற்றி பெற்று முதலிடம் பிடித்து, மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், 17 வயதுக்குட்பட்டோர் இரட்டையர் மாணவியர் பிரிவில், மாணவியர் பத்மபிரியா, காவியா ஆகியோர் முதலிடம் பிடித்து, மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்ற மாணவ - மாணவியரை, பள்ளி முதல்வர் காயத்ரி, உடற்கல்வி ஆசிரியர் செல்வா ஆகியோர் பாராட்டினர்.