மேலும் செய்திகள்
தி.மு.க. - அ.தி.மு.க.வில் 'சீட்' யாருக்கு?
16-Dec-2025
காஞ்சிபுரம்:தேர்தல் நெருங்கும் நிலையில், காஞ்சிபுரம் தொகுதியில் 'சீட்' பெறுவதற்கு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளை, கட்சி நிர்வாகிகள் நடத்துவதாக, தி.மு.க.,வினர் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது,தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான பிரசார பணிகளை, அரசியல் கட்சியினர் இப்போதே துவங்கி விட்டனர். தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்கள் இருந்தாலும், ஒவ்வொரு தொகுதியிலும் யார் போட்டியிட போவது என்ற எதிர்பார்ப்பு எகிறுகிறது.காஞ்சிபுரம் சட்டசபை தொகுதியில், தி.மு.க., - -எம்.எல்.ஏ., எழிலரசன், ஏற்கனவே இரண்டு முறை போட்டியிட்டு வென்றுள்ளார். வன்னியரான இவருக்கு ஏற்கனவே இரண்டு முறை சீட் வழங்கப்பட்டதால், இம்முறை மாற்று சமுதாயத்தினருக்கு சீட் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நிலவுகிறது.இது ஒருபுறம் இருக்க, காஞ்சிபுரம் தொகுதியில், மேலும் நான்கு நிர்வாகிகள் தங்களுக்கு சீட் பெற தேவையான சிபாரிசுகளை, மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் நகர்த்தி வருகின்றனர்.கட்சி மேலிட செல்வாக்கு பெற்ற நபர்களை சந்திப்பதும், அவர்களிடம் தங்களுக்கான சீட் பற்றி பரிந்துரை செய்யும் பணிகளும் நடப்பதாக கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.காஞ்சிபுரத்தில் தற்போதைய சூழலில், தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினரான சுகுமார், விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் யுவராஜ், மாநகர செயலர் தமிழ்ச்செல்வன் என, நான்கு பேர் இம்முறை 'சீட்' பெறுவதற்கான முயற்சியில் உள்ளனர். அதேசமயம் காஞ்சிபுரம் 'சிட்டிங்' எம்.எல்.ஏ., எழிலரசனும் இம்முறை மூன்றாவது முறையாக 'சீட்' பெற முயற்சிக்கிறார்.இதில், சுகுமார் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகிய இரு நிர்வாகிகளும், துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளையொட்டி, நலத்திட்ட உதவிகளை, வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வத்தை வைத்து நேற்றுமுன்தினம் வழங்கினர். கட்சியில் தங்களது இருப்பை வெளிப்படுத்தவும், சீட் பெறுவதற்கான காய் நகர்த்தும் வேலை என, தி.மு.க.,வினர் மத்தியில் தெரிவித்து வருகின்றனர்.இதுகுறித்து தி.மு.க.,வினர் கூறியதாவது:மண்டல தேர்தல் பொறுப்பாளரான எம்.ஆர்.கே.,பன்னீர்செல்வத்தை அழைத்து வந்து நலத்திட்ட உதவிகளை, ராதாகிருஷ்ணனும், சுகுமாரும் கொடுத்துள்ளனர். இந்த செயல்பாடு, தங்களுக்கான 'சீட்' பெறுவதற்கான காய் நகர்த்தும் வேலை.காஞ்சிபுரத்தின் தி.மு.க., நிர்வாகிகளான, ராதாகிருஷ்ணன், யுவராஜ், சுகுமார் உள்ளிட்டோரை தி.மு.க., மேலிடம் கருத்தில் வைத்துள்ளது. இதில், 'சீட்' பெறுவதற்கான முயற்சியே இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என்பது பலருக்கும் தெரிந்தது தான்.தி.மு.க.,வில் யார் போட்டியிட்டாலும், அ.தி.மு.க.,வில் மாவட்ட செயலர் சோமசுந்தரம் போட்டியிடுவாரா அல்லது வேறு யார் போட்டியிட போவது என்ற கேள்வி நிலவுகிறது.காரணம், அ.தி.மு.க.,வில் சோமசுந்தரம் போட்டியிட்டால், முதலியார் சமுதாய ஓட்டுகள் பெரும்பகுதி அவருக்கு செல்லும் என்பதால், வெற்றி பெறுவது கடினமாகும். அதனால், தி.மு.க.,வில் யாரை நிறுத்தினால் சரியாக இருக்கும் என்ற குழப்பம் நீடிக்கிறது.எம்.எல்.ஏ., எழிலரசனின் சாதக, பாதகங்கள் பற்றியும், உளவுத்துறை ஏற்கனவே பல அறிக்கைகளை அரசுக்கு சமர்ப்பித்துள்ளது. அதன் அடிப்படையிலும் கட்சி மேலிடம் யோசிக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
16-Dec-2025