ஊழியர்கள் இல்லாததால் பூட்டி கிடக்கும் கழிப்பறை
அய்யங்கார்குளம்: காஞ்சிபுரம் ஒன்றியம், அய்யங்கார்குளம் கிராமத்தில் சஞ்சீவிராயர் கோவில் உள்ளது . இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் இயற்கை உபாதை கழிக்க கழிப்பறை வசதி வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர். இதையடு த்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், துாய்மை பாரத இயக்கம் 2021- - 22ன் திட்டத்தின் கீழ், கோவில் அருகில் சமுதாய கழிப்பறை வளாகம் கட்டப்பட்டு இரு ஆண்டுகளுக்கு முன் திறக்கப்பட்டது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் கழிப்பறையை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், ஆறு மாதங்களுக்கு மேலாக கழிப்பறை திறக்காமல் பயன்பாடின்றி பூட்டியே உள்ளது. இதனால், சஞ்சீவிராயர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கழிப்பறையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து காஞ்சிபுரம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், 'அய்யங்கார்குளம் சஞ்சீவிராயர் கோவில் அருகில் மூடப்பட்டுள்ள கழிப்பறையை, ஒரு வாரத்திற்குள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.