தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால் விபத்து அபாயம்
உத்திரமேரூர்: கரும்பாக்கம் விவசாய நிலங்களில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை உயர்த்தி கட்டி விபத்து அபாயத்தை தவிர்க்க அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். உத்திரமேரூர் ஒன்றியம், கரும்பாக்கத்தில் இருந்து, மிளகர்மேனி செல்லும் சாலையின் இருபுறங்களிலும் விவசாய நிலங்கள் உள்ளன. இதில், ராஜம்பேட்டைக்கு பிரிந்து செல்லும் சாலை பகுதியில், விவசாய நிலங்களில் மின் கம்பங்களில் இருந்து செல்லும் மின் கம்பிகள் தாழ்வாக தொங்கியபடி உள்ளது. தாழ்வாக செல்லும் இந்த மின் கம்பிகளால், அறுவடை இயந்திரம் பயன்பாடு மற்றும் டிராக்டர் மூலம் உழவு பணி செய்தல் போன்ற பணிகள் பாதிப்பதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர். எனவே, கரும்பாக்கம் விவசாய நில பகுதியில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை உயர்த்தி கட்டி விபத்து அபாயத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.