சாலையில் ஓய்வெடுக்கும் மாடுகள்: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ஸ்ரீபெரும்புதுார்: ஒரகடம் அருகே, வடக்குப்பட்டு பிரதான சாலையை மறித்து ஓய்வெடுக்கும் மாடுகளால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். குன்றத்துார் ஒன்றியம், வடக்குப்பட்டு ஊராட்சியில் 2,000க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இப்பகுதி மக்களின் பிரதான தொழிலாக, விவசாயம் மற்றும் கால்நடைகள் வளர்ப்பு உள்ளது. இந்த நிலையில், கால்நடைகளை வளர்ப்போர், தங்களில் மாடுகளை கொட்டகையில் கட்டி வைத்து பராமரிப்பது இல்லை. மேய்ச்சலுக்கு செல்லும் அவை, சாலைகளில் உலா வருவதோடு, போக்குவரத்திற்கு இடையூறாக சாலைகளை மறித்து ஓய்வெடுப்பதால், விபத்துகள் நடக்கின்றன. அதேபோல, வடக்குப்பட்டு - பாலுார் பிரதான சாலையில் இரவு நேரங்களில் கூட்டம், கூட்டமாக மாடுகள் படுத்து ஓய்வெடுக்கிறன. இருக்கர வாகனங்கள் கூட சென்று வர முடியாத அளவிற்கு, சாலை முழுதையும் ஆக்கிரமித்து படுத்துள்ள மாடுகளால், பகுதிமக்கள் சிரமப்படுகின்றனர். மேலும், இரவு நேரங்களில் சாலையில் ஓய்வெடுக்கும் மாடுகள், அங்கேயே சாணத்தை கழிக்கின்றன. சாலையில் உள்ள மாட்டுச் சாணம் அப்படியே, சகதியாக மாறி, நடக்க முடியாமல் அப்பகுதி மக்கள் அவதி அடைகின்றனர். கடும் துர்நாற்றமும் வீசி வருகிறது. எனவே, இரவு நேரங்களில் மாடுகளை கட்டிவைத்து பராமரிக்காமல், சாலையில் திரியவிடும் மாட்டின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மீறுவோரின் மாடுகளை பிடித்து மாட்டுத் தொழுவத்தில் அடைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.