பூசிவாக்கம் ரயில் கடவுப்பாதையில் தார் சாலையின்றி வாகன ஓட்டிகள் அவதி
காஞ்சிபுரம்: ரயில் கடவுப்பாதை குறுக்கே, தார் சாலை போடாததால், பூசிவாக்கம் பகுதியை வாகன ஓட்டிகள் கடந்து செல்ல அவதிப்படுகின்றனர். அரக்கோணம் - காஞ்சிபுரம் - செங்கல்பட்டு இடையே மின் ரயில் வழித்தடம் செல்கிறது. இந்த ரயில் வழித்தடத்தில், காலை மற்றும் மாலை நேரங்களில், மின்சார ரயில்கள் மற்றும் விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. பூசிவாக்கம் ரயில் கடவுப்பாதை வழியாக, கருக்குப்பேட்டை, புதுப்பேட்டை, திம்மையன்பேட்டை, நாயக்கன்பேட்டை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கிதிரிப்பேட்டை, செங்கல்வராயபுரம், புத்தகரம் ஆகிய கிராமங்களுக்கு சென்று வருகின்றனர். சமீபத்தில், அரக்கோணம் - காஞ்சிபுரம் - செங்கல்பட்டு இடையே மின் ரயில் வழித்தடத்தில், புதிய தண்டவாளம் மாற்றும் பணியை ரயில்வே துறையினர் செய்து வருகின்றனர். இந்த பணிக்கு, பூசிவாக்கம் கடவுப்பாதை நடுவே இருந்த தார் சாலை அகற்றப்பட்டது. அதன் பின் புதிய தார் சாலை போடவில்லை. இதனால், அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே, பூசிவாக்கம் ரயில் கடவுப்பாதையில் தார் சாலை போடுவதற்கு சம்பந்தப்பட்ட ரயில்வே துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.