உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / விமான நிலையத்திற்கு புதிய மேம்பால சாலை; தமிழக அரசிடம் அனுமதி கேட்குது ஆணையம்

விமான நிலையத்திற்கு புதிய மேம்பால சாலை; தமிழக அரசிடம் அனுமதி கேட்குது ஆணையம்

தாம்பரம்- போரூர் சாலையில் இருந்து நேரடியாக விமான நிலையத்திற்கு வாகனங்கள் வரும் வகையில், புதிய மேம்பால சாலை அமைக்க விமான நிலைய ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பித்து, விமான நிலைய ஆணையம் அனுமதி கேட்டுள்ளது. சென்னை விமான நிலையம், மூன்று முனையங்களுடன் செயல்பட்டு வருகிறது. இரண்டாம் கட்ட ஒருங்கிணைந்த சர்வதேச முனையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. சரக்குகளை கையாளும் கார்கோ விமான சேவைகளுக்கும், தனி முனையங்கள் உள்ளன. சென்னை விமான நிலையத்திற்கு வரும் வாகனங்கள், ஜி.எஸ்.டி., சாலை வழியாகத்தான் வர முடியும் என்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மற்ற மாவட்டங்களில் இருந்து வரும் சரக்கு வாகனங்களுக்கு, இது பெரிய தலைவலியாகி விடுகிறது. இவற்றை எளிமைப்படுத்தும் வகையில், ஐந்தாவது பயணியர் முனையம் அமைக்க, விமான நிலைய ஆணையம் முடிவு செய்தது. அதன்படி, தாம்பரம் - போரூர் சாலை வழியாக, விமான நிலையத்தின் மறுபுறம் இருந்து, புதிய மேம்பால சாலை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கையை, விமான நிலைய ஆணையம் தற்போது தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளது. இந்த சாலை அமைக்க அனுமதி கிடைத்தால், ஜி.எஸ்.டி., சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறையும். அதனால், பயணியர் மற்றும் சரக்கு வாகனங்களுக்கான நேரமும் மிச்சமாகும். மற்ற ஊர்களில் இருந்து வரும் சரக்கு வாகனங்களும், மிக எளிமையாக விமான நிலையத்தை அணுக முடியும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து, விமான நிலைய ஆணைய அதிகாரிகள் கூறியதாவது: சென்னை விமான நிலையத்தில், விமானங்கள் இயக்கப்படும் பகுதிகளில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. அதன்படி, முதல் மற்றும் இரண்டாம் ஓடுபாதைகளின் சீரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதனால், விமானங்கள் இயக்க நேரம் குறையும். மேலும், விமான நிலையத்தை சுற்றி, மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள குறிப்பிட்ட சில இடங்களை மேம்பாட்டு பணிகளுக்காக அடையாளம் கண்டுள்ளோம். அதற்காக,மாநில அரசிடம் கூடுதலாக, 33 ஏக்கர் நிலம் கேட்கப்பட்டுள்ளது. தற்போது, ஜி.எஸ்.டி., சாலை வழியாக ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், போரூர் - தாம்பரம் சாலை வழியாக விமான நிலையத்தை இணைக்கும் புதிய மேம்பால சாலை திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கையை, தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளோம். அரசு அனுமதி அளித்தால்போதும்; சாலையை ஆணையமே அமைத்துக் கொள்ளும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தாமதம் கூடாது

சென்னை விமான நிலையத்திற்கான நிலம் கையகப்படுத்துதல், வளர்ச்சிப் பணிகள் போன்ற விஷயங்களில், தமிழக அரசு தொடர்ந்து காலதாமதம் செய்து வருகிறது. விமான நிலைய ஆணையம் குறித்த நேரத்தில், திட்ட அறிக்கையை சமர்ப்பித்தாலும், மாநில அரசு அவற்றை கண்டு கொள்வதில்லை. இதனால், எதிர்பார்ப்புடன் துவங்கும் பல பயனுள்ள திட்டங்கள் கிடப்பில் போடப்படுவதாக பயணியர் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, தமிழக அரசு இந்த விஷயங்களில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என, பயணியரிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை