அடிப்படை வசதிகள் இல்லாத ஒரகடம் தீயணைப்பு நிலையம்
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே ஒரகடம் சிப்காட் தொழில் பூங்காவில், 200க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அதேபோல், தொழிற்சாலைகள் அதிகரிப்பால் குடியிருப்புகள், வணிக வளாகங்கள், மருத்துவமனை, உணவகம், தனியார் பள்ளிகள் உள்ளிட்டவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.இந்நிலையில், ஒரகடத்தில் தீயணைப்பு நிலையம் இல்லாததால், இப்பகுதியில் தீ விபத்து அசம்பாவிதங்கள் ஏற்படும் போது, ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவேண்டிய சூழல் இருந்தது.மேலும், 15 கி.மீ., துாரம் உள்ள ஸ்ரீபெரும்புதுார் தீயணைப்பு நிலையத்தில் இருந்து ஒரகடம் வருவதற்கு தாமதமாவதால், மீட்பு பணியில் தொய்வு, பொருட்சேதம், உயிர்ச்சேதமும் ஏற்பட்டு வந்தது.இதனால், தொழிற்சாலைகள் நிறைந்த ஒரகடம் பகுதியில், தீணைப்பு நிலையம் அமைக்க வேண்டுமென எழுந்த கோரிக்கையை தொடர்ந்து, ஒரகடம் அடுத்த பண்ருட்டி கண்டிகை பகுதியில், ஒரகடம் தீயணைப்பு நிலையம், கடந்த மார்ச் மாதம் வாடகை கட்டடத்தில் துவங்கப்பட்டு இயங்கி வருகிறது.தீயணைப்பு நிலையத்தில் போதிய அடிப்படை வசதி இல்லாதாதால், தீயணைப்பு வீரர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். அதேபோல், தீயணைப்பு வாகனம் நிறுத்தும் இடத்தில் கூரை வசதி இல்லை. இதனால், வெயில் மற்றும் மழையில் திறந்தவெளியில் தீயணைப்பு வாகனம் நிறுத்தப்படுகிறது.மேலும், தண்ணீர் குழாய், வால்வு உள்ளிட்டவை துருப்பிடித்து வீணாகும் நிலை உள்ளது. அதேபோல், மழை காலங்களில் தீயணைப்பு வாகன நிறுத்தம் சேறும், சகதியுமாக மாறுவதால், வாகனம் சேற்றில் சிக்குகிறது.எனவே, ஒரகடம் தீயணைப்பு நிலையத்தில் அடிப்படை வசதிகளை எற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.