நாடாளுமன்ற நிலைக்குழுவினர் கரசங்கால் ஊராட்சியில் ஆய்வு
குன்றத்துார்:காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் ஒன்றியம், கரசங்கால் ஊராட்சியில், சுற்றுச்சூழல் பூங்கா உள்ளது.இங்கு, ஊரக வளர்ச்சி துறை சார்பில், 100 நாள் வேலை எனும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் உற்பத்தி, மண் புழு உரம், இயற்கை உரம் தயாரித்தல், குளம் அமைத்தல், பிளாஸ்டிக் பொருட்களை அரத்தல் உள்ளிட்ட பணி மேற்கொள்ளப்படுகிறது. இந்த பணிகளை பார்லிமென்ட் நிலைக்குழு தலைவர் சப்தகிரி சங்கர் உலாகா தலைமையில், தமிழகத்தைச் சேர்ந்த வைகோ, ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த ஜூகால் கிஷோர், ஒடிசாவை சேர்ந்த நாபா சரண் மஜ்ஹி உட்பட 11 பேர் உடைய எம்.பி., குழுவினர், நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.அங்கு நடக்கும் பணிகள் குறித்த விபரங்களை கேட்டறிந்து, வருகை பதிவேடை பார்வையிட்டனர்.வருகை பதிவேடில் எஸ்.டி., பழங்குடி பிரிவினருக்கு பணிகள் குறைவாக வழங்கப்பட்டது ஏன் என, கேள்வி எழுப்பினர்.மேலும், அங்கு அமைக்கப்பட்ட குளம், புதியதாக தோண்டப்பட்டது போல் உள்ளது எனவும் சந்தேகம் எழுப்பினர். குளம் தோண்டும் பணி நடக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஆதாரத்தை அதிகாரிகள் காண்பித்தனர். பார்லிமென்ட் நிலைக்குழுவினர் தொடர்ந்து எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு ஊரக வளர்ச்சி துறை கூடுதல் செயலர் ககன்தீப் சிங் பேடி, ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் பொன்னையா, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி ஆகியோர் விளக்கம் அளித்தனர்.
ஒரே இடத்தில் அடிக்கடி ஆய்வு:விழிபிதுங்கும் அதிகாரிகள்
காஞ்சிபுரம் மாவட்டத்தில், வளர்ச்சி பணிகளை பார்வையிட பல்வேறு குழுவினர்கள் அடிக்கடி வருகின்றனர். இவர்கள், கரசங்கால் சுற்றுசூழல் பூங்காவுக்கும், எழுச்சூரில் உள்ள இருளர் பழங்குடி குடியிருப்பு பகுதிகளுக்கு மட்டும் அழைத்து செல்லப்படுகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வேறு பகுதிகளுக்கு அழைத்து செல்லப்படுவதில்லை.பார்லிமென்ட் நிலைக்குழுவினர் வருகைக்காக, பொங்கல் விடுமுறை நாட்களில் கரசங்காலில் சாலை அமைத்தல், இயற்கை உரம் கூடத்திற்கு கூரை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் அவசர அவசரமாக நடந்தன.மேலும், எழுச்சூரில் இருளர் பழங்குடி வீடுகளில் விறகு அடுப்பால் சமைப்பதால் சுவற்றில் கரும்புகை கரை படிகிறது. இந்த புகை கரையை மறைக்க, வீடுகளில் பெயின்ட் அடிக்கப்பட்டது. ஒவ்வொரு முறையும் பணிகளை பார்வையிட வரும் குழுவினருக்காக, ஏற்கனவே நடந்த பணிகளை புதுப்பிக்க வேண்டி உள்ளதால், குன்றத்துார் ஒன்றிய அதிகாரிகள் விழிபிதுங்குகின்றனர்.