காஞ்சிபுரம் - செங்குன்றம் இடையே அரசு பஸ் இயக்க பயணியர் வலியுறுத்தல்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சென்னை செங்குன்றம் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.அதேபோல, செங்குன்றத்தை சேர்ந்தவர்களும் காஞ்சிபுரத்தில் பல்வேறு பணிக்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில், ,காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து செங்குன்றத்திற்கு செல்ல நேரடி அரசு பேருந்து இயக்கப்படவில்லை.காஞ்சிபுரத்தில் இருந்து, மாலை 4:00 மணிக்கு செங்குன்றம் வழியாக பொன்னேரி செல்லும் பேருந்தும் முறையாக இயக்கப்படவில்லை.தனியார் பேருந்துகளும் போதுமான அளவு இயக்கப்படவில்லை. இதனால், செங்குன்றம் செல்லும் பயணியர், பூந்தமல்லிக்கு சென்று, அங்கிருந்து மாற்று பேருந்து வாயிலாக செங்குன்றம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், பயண நேரம் விரயமாவதுடன், கூடுதல் பணமும் செலவழிக்க வேண்டியுள்ளது.எனவே, காஞ்சிபுரத்தில் இருந்து, செங்குன்றத்திற்கு போதுமான அளவு அரசு பேருந்து இயக்க அரசு போக்குவரத்து கழகம், விழுப்புரம் கோட்டம், காஞ்சிபுரம் மண்டல நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி உள்ளனர்.