சேதமான பஸ் நிலைய சாலை சீரமைக்க பயணியர் வலியுறுத்தல்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பேருந்து நிலைய வளாகத்தில், சேதமடைந்த சாலையை, மாநகராட்சி நிர்வாகம் சீரமைக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணியர் வந்து செல்கின்றனர். இந்நிலையில், சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக, பேருந்து நிலைய வளாகத்தில், சாலை சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், பேருந்தில் ஏற முயற்சிக்கும் பயணியரும், பேருந்தில் இருந்து இறங்கும் பயணியரும் பள்ளம் இருப்பதை கவனிக்காமல் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். இரு நாட்களுக்கு முன் பேருந்தில் ஏற முயன்ற பெண் ஒருவர் நிலைதடுமாறி விழுந்ததில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. மேலும், இருசக்கர வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ள பேருந்து நிலைய சாலையை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி வருகின்றனர்.