சேதமடைந்த சாலையை சீரமைக்க அழிசூர் மக்கள் வலியுறுத்தல்
உத்திரமேரூர்:சேதமடைந்துள்ள அழிசூர் சாலையை, சீரமைக்க மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர். உத்திரமேரூர் அடுத்த, அழிசூரில் சிலாம்பாக்கம் செல்லும் சாலை உள்ளது. இச்சாலை, 2023ம் ஆண்டு, 'மிக்ஜாம்' புயலின்போது கடுமையாக சேதமடைந்தது. இதை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, 2023 -- 24ம் நிதி ஆண்டில், 40 லட்சம் ரூபாய் செலவில் புதிய தார்ச்சாலை அமைக்கப்பட்டது. தற்போது, அழிசூர் பகுதியில் உள்ள இச்சாலை சேதமடைந்து பெயர்ந்து வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் அவ்வழியே செல்லும்போது, நிலைத்தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, சேதமடைந்த சாலையை சீரமைக்க ஊரக வளர்ச்சி துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.