செடிகள் வளர்ந்து துார்ந்த கால்வாய் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வர்தமான் நகர், பிரதான சாலையோரம் செடி, கொடிகள் வளர்ந்துள்ள கான்கிரீட் கால்வாயால், மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சி, 49வது வார்டு வர்தமான் நகர் பிரதான சாலையில், அப்பகுதியில் பெய்யும் மழைநீர் வெளியேறும் வகையில், கான்கிரீட் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இக்கால்வாயை மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், கால்வாயில், செடி, கொடிகள் வளர்ந்து, கால்வாய்க்கான அடையாளமே தெரியாமல் துார்ந்த நிலையில் உள்ளது. இதனால், பலத்த மழை பெய்தால், கால்வாய் வாயிலாக வெளியேறும் மழைநீர், சாலையிலும், அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளையும் சூழும் நிலை உள்ளது. வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், வர்தமான் நகரில் சாலையோரம் துார்ந்த நிலையில் உள்ள மழைநீர் வடிகால்வாயை துார்வாரி சீரமைக்க, மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.