அரை நிர்வாணமாக அட்டகாசம் போலீஸ்காரரை கண்டித்து மறியல்
மாங்காடு:மாங்காடு அடுத்த மவுலிவாக்கம், ராஜராஜன் நகர் பிரதான சாலை 4வது தெருவில் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. அங்கு வசித்து வருபவர் ஆனந்து, 38. இவர், கோயம்பேடு போக்குவரத்து காவல் பிரிவில், போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். சில நாட்களாக, அதீத போதையில் அப்பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகளின் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை அடித்து நொறுக்கி வந்துள்ளார்.அதுமட்டுமின்றி, வீட்டின் கதவுகளை தட்டி உடைப்பதும், வீடுகளுக்குள் புகுந்து, வீட்டில் இருக்கும் பொருட்களை துாக்கி வீசுவதுமாக அட்டூழியம் செய்துள்ளார். தட்டிக்கேட்போரிடம் போலீஸ் எனக்கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும், இரவில் பெண்கள் இருக்கும் வீடுகளின் கதவை தட்டி, அரை நிர்வாணமாக நின்றதாகவும் தெரிகிறது.இது குறித்து, அப்பகுதிவாசிகள், மாங்காடு போலீசில் புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை.இதையடுத்து, நேற்று மதியம், குன்றத்துார் - போரூர் சாலையில் பாய்கடை சந்திப்பில், 30க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், ஆனந்துவை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.விசாரணையில், ஆனந்துவிற்கு திருமணமாகி, குழந்தை இல்லாததால் விவாகரத்து ஆகியுள்ளது. வேறு திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு, பிப்., 2ம் தேதி திருமணத்தை முடித்து, 9ம் தேதி வரவேற்பு நிகழ்ச்சி நடக்க இருந்த நிலையில், திடீரென திருமணம் நின்றதாக கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சலில் இருந்த ஆனந்து, போதையில் இதுபோன்ற செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. மாங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.