உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பரந்துாரில் ரயில் நிலைய திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா

பரந்துாரில் ரயில் நிலைய திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா

காஞ்சிபுரம்:''பரந்துாரில் புதிதாக அமைய உள்ள விமான நிலையத்தை இணைக்கும் வகையில், அங்கு ரயில் நிலையம் அமைக்கும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது,'' என, மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா தெரிவித்தார்.தமிழகம் வந்துள்ள மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா நேற்று, காஞ்சிபுரம் சென்றார். காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தை அவர் பார்வையிட்டார்.அப்போது, பொன்னேரிக்கரை இந்திரா நகர் பகுதியில் இருந்து, காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை மேம்பாலத்தை இணைக்கும் பகுதி வரை சுரங்கப்பாதை அமைத்து தர வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.இது தொடர்பாக, ரயில்வே அதிகாரிகளுடன் ஆலோசித்தபின், சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, அமைச்சர் சோமண்ணா உறுதி அளித்தார்.

கோவிலில் தரிசனம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சென்ற ரயில்வே துறை அமைச்சர் சோமண்ணா மூலவரை தரிசனம் செய்தார்.இதையடுத்து, காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலுக்கு சென்றார். அங்கு, கோவில் நிர்வாகம் சார்பில், பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.பின், நிருபர்களிடம் சோமண்ணா கூறியதாவது:பரந்துாரில் புதிதாக அமைய உள்ள விமான நிலையத்தை இணைக்கும் வகையில், பரந்துாரில் ரயில் நிலையம் அமைக்கும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது.மக்களை பாதிக்காத வகையில், ரயில்வே கட்டணம் படிப்படியாக உயர்த்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.அதைத் தொடர்ந்து, சுங்குவார்சத்திரத்தில் பா.ஜ., பிரமுகர்களை சந்தித்து, கோரிக்கை மனுக்களை பெற்றார்.மேலும், ஸ்ரீபெரும்புதுார் தனியார் பள்ளி ஒன்றில் பங்கேற்று கண்காட்சிகளை துவக்கி வைத்து, எமர்ஜென்சி காலத்தில் இருந்து மீண்டு வந்ததை மாணவர்களிடையே உரையாடினார்.

மீண்டும் சுற்றுவட்ட ரயில் இயக்க வலியுறுத்தி மனு

ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணாவிடம், தெற்கு ரயில்வே பயணியர் ஆலோசனைக் குழு உறுப்பினர் தமிழச்செல்வன் மனு அளித்தார்.அதில் இடம்பெற்ற முக்கிய கோரிக்கைகள்: காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் இயங்கி வந்த முன்பதிவு மையம், காலை 8:00 மணி முதல், இரவு 8:00 மணி வரையில் செயல்பட்டு வந்தது. கொரோனா காலத்திற்கு பின், காலை 8:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மட்டுமே செயல்படுகிறது. இரவு 8:00 மணி வரையில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் சென்னை கடற்கரையிலிருந்து சென்ட்ரல் வழியாக தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம், திருவள்ளூர் மார்க்கமாக இயக்கப்பட்ட சுற்றுவட்ட ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் மேல்மருவத்துார் - -திருத்தணி வரை நேரடி ரயில் இயக்க வேண்டும்.இவை உட்பட, 12 கோரிக்கைகள் இடம் பெற்றிருந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ