உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / உத்திரமேரூர் - திருத்தணிக்கு அரசு பஸ் இயக்க கோரிக்கை

உத்திரமேரூர் - திருத்தணிக்கு அரசு பஸ் இயக்க கோரிக்கை

காஞ்சிபுரம்: உத்திரமேரூரில் இருந்து காஞ்சிபுரம் வழியாக, திருத்தணிக்கு நேரடி பேருந்து சேவை துவக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விழுப்புரம் கோட்டம், காஞ்சிபுரம் மண்டலம் கட்டுப்பாட்டில், காஞ்சிபுரம், ஓரிக்கை, உத்திரமேரூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து பணிமனைகளின் கீழ், நகரம் மற்றும் கிராமப்புறங்களுக்கு பல்வேறு வழித்தடங்களில் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. உத்திரமேரூர் போக்குவரத்து பணிமனை கட்டுப்பாட்டில் இயக்கப்படும் பேருந்துகளில், உத்திரமேரூரில் இருந்து காஞ்சிபுரம், அரக்கோணம் வழியாக திருத்தணிக்கு நேரடி பேருந்து சேவை இயக்கப்படுவதில்லை. அதற்கு பதிலாக, உத்திரமேரூர் - காஞ்சிபுரம் வரையில் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. காஞ்சிபுரத்தில் இருந்து மற்றொரு பேருந்து பிடித்து, அரக்கோணம் வழியாக திருத்தணிக்கு செல்ல வேண்டி உள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்து திருப்பதிக்கு செல்லும் பேருந்துகளில், சில நடத்துநர்கள் திருப்பதி செல்லும் நபர்களை ஏற்றிய பிறகே, திருத்தணி, அரக்கோணம் செல்லும் பயணியரை ஏற்ற அனுமதி அளிக்கின்றனர். இதனால், காஞ்சிபுரத்தில் இருந்து திருத்தணி செல்லும் முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் அரசு பேருந்தில் நின்று பயணம் செய்ய வேண்டிய நிலை உருவாகி உள்ளது. எனவே, உத்திரமேரூரில் இருந்து காஞ்சிபுரம், அரக்கோணம் வழியாக திருத்தணிக்கு நேரடி அரசு பேருந்து இயக்க வேண்டும் என, உத்திரமேரூர் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ