உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வீணாகும் அரசு கட்டடங்களை பயன்படுத்த கோரிக்கை

வீணாகும் அரசு கட்டடங்களை பயன்படுத்த கோரிக்கை

வாலாஜாபாத்:வாலாஜாபாத், ரயில்வே நிலையம் பின்புறம் வணிகம் தொடர்பாக கட்டிய கட்டடங்கள் பயன்பாடின்றி வீணாகி வருவது குறித்து சமூக ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். வாலாஜாபாத் பேரூராட்சியில், 15 வார்டுகளில் 20,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். வாலாஜாபாதில் இருந்து, வெள்ளேரியம்மன் கோவில் வழியாக கிதிரிப்பேட்டை செல்லும் சாலை உள்ளது. இச்சாலையில், ரயில்வே நிலையம் பின்புறம் பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில், பல ஆண்டுகளுக்கு முன் பேரூராட்சி சார்பில் வணிக வளாக கட்டடங்கள் கட்டப்பட்டன. ஒரு அறை கொண்ட 10 கட்டடங்கள் தனி, தனியாக ஏற்படுத்தப்பட்டு, அவை அச்சமயம் குத்தகைக்கு விடப்பட்டு பல்வேறு கடைகள் செயல்பட்டு வந்தன. பின், நாளடைவில் அக்கட்டடங்கள் கைவிடப்பட்டு 20 ஆண்டுகளாக பயன்பாடு இல்லாமல் உள்ளது. இதனால், பேரூராட்சிக்கான வருவாய் இழப்பு ஏற்படுவதோடு, அக்கட்டட பகுதிகள் சமூக விரோதிகள் புகலிடமாகி வருவதாக அப்பகுதி மக்கள் பலரும் கூறி வருகின்றனர். எனவே, வெள்ளேரியம்மன் கோவில் கிராமம் அருகே பராமரிப்பின்றி வீணாகும் அரசு கட்டடங்களை சீர்செய்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என வாலாஜாபாத் பேரூராட்சி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வாலாஜபாதில், இதுவரை மேற்கொள்ளாமல் இருக்கும் மீன் சந்தை மற்றும் இறைச்சி கூடாரத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்டவைகளுக்கு இக்கட்டடத்தை பயன்படுத்தி, மக்களுக்கு பயன் அளிப்பதோடு, வருவாய் ஈட்ட பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை