விதிமீறிய விளம்பர பலகைகளால் வருவாய் இழப்பு ...நல்லா கல்லா கட்டுறாங்க... !:நோட்டீஸ் அனுப்பி கடமையை முடித்த அதிகாரிகள்
காஞ்சிபுரம்,:பல இடங்களில் அனுமதி பெறாமலும், சில இடங்களில் அனுமதி அளவை காட்டிலும் விதிகளை மீறி அமைக்கப்படும் விளம்பர பலகைகளால், காஞ்சி மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுநாள் வரை வேடிக்கை பார்த்து வந்த அதிகாரிகள், கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பியதும், 'நோட்டீஸ்' அனுப்பிவிட்டோம் எனக்கூறி, தங்கள் கடமையை முடித்துள்ளனர். காஞ்சிபுரம் மாநகராட்சியில், விளம்பர பதாகை அமைக்க உரிமம் வழங்குவதில், ஏராளமான குளறுபடி உள்ளதாக, கவுன்சிலர்கள் இடையே புகார் எழுந்துள்ளது. உதாரணமாக, காஞ்சிபுரம் மாநகராட்சியில், 54 இடங்களில் விளம்பர பதாகை அமைக்க, மாநகராட்சி நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. அரசு வழிகாட்டியில், 7 மீட்டர் அகலம், 5 மீட்டர் உயரம் முதல், 15 மீட்டர் உயரம், 20 மீட்டர் அகலம் வரை அளவுகளில் விளம்பர பதாகை அமைக்கலாம் என, அனுமதி வழிகாட்டியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. விளம்பர பதாகை அமைக்கும் நிறுவனங்கள், குறைந்த அளவிற்கு கட்டணம் செலுத்திவிட்டு, அதிக அளவுள்ள விளம்பர பதாகைகள் அமைத்துள்ளன. குறிப்பாக, காஞ்சிபுரம் விளக்கடி கோவில் தெரு அருகே, தனியார் கட்டடத்தில், 5 மீட்டர் உயரமும், 3 மீட்டர் அகலம் இருக்கக்கூடிய விளம்பர பதாகை அமைக்க அனுமதி பெறப்பட்டுள்ளது. ஒரு சதுர அடிக்கு 6,000 ரூபாய் வீதம் என, ஒன்பது லட்சம் ரூபாய் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டும். அந்த நிறுவனம், 6.28 லட்சம் ரூபாய் மட்டுமே செலுத்தி உள்ளது. மேலும், மாநகராட்சி நிர்வாகம் அனுமதித்த அளவை காட்டிலும் கூடுதல் அளவிற்கு, விளம்பர பதாகை அமைத்துள்ளது. ஒரு இடத்தில், மூன்று லட்சம் ரூபாய் முதல் ஆறு லட்சம் ரூபாய் வரையில் இழப்பீடு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த வகையில், காஞ்சிபுரம் மாநகராட்சி முழுதும், 54 இடங்களில், 2.70 கோடி ரூபாய் வரையில் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு ஆண்டிற்கு மூன்று கோடி ரூபாய் வீதம் ஐந்து ஆண்டுகளில், 15 கோடி ரூபாய் மாநகராட்சி நிர்வாகத்திற்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் மவுனம் காஞ்சிபுரம் மாநகராட்சி கட்டுப்பாட்டில், நெடுஞ்சாலைத் துறை சாலை ஓரங்களில், எட்டு இடங்கள் மட்டுமே சிறிய அளவிலான விளம்பர பலகை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், காஞ்சிபுரம் மாநகரில் ஒரு தெருவில், 10க்கும் மேற்பட்ட பதாகைகள் இருப்பதால், மாநகராட்சி நிர்வாகமும், நெடுஞ்சாலைத் துறை நிர்வாகமும் கண்டுகொள்ளாமல் உள்ளன. மாநகராட்சிக்கு வர வேண்டிய வருவாயை, அதிகாரிகள் தங்கள் பக்கம் சத்தமின்றி திருப்பி, கல்லா கட்டி வருவதால், இந்த விவகாரத்தில் மவுனமாக இருப்பதாக, கவுன்சிலர்களே குற்றம் சாட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, காஞ்சிபுரம் மாநகராட்சி தி.மு.க., கவுன்சிலர் ஒருவர் கூறியதாவது: அரசு நிர்ணயம் செய்த அளவை காட்டிலும், கூடுதல் அளவிற்கு விளம்பர பதாகை அமைத்துள்ளனர். இதன் மூலமாக, மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஆண்டிற்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. கிணற்றில் போட்ட கல் இதை கண்காணித்து, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. முறையாக அளவீடு செய்யவில்லை. அதற்குரிய கட்டணம் வசூலிக்கவில்லை. கிணற்றில் போட்ட கல்லை போல உள்ளன. இதையடுத்து, நீதிமன்றத்தை நாட உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து, காஞ்சிபுரம் மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: அனைத்து விளம்பர நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். அரசு நிர்ணயம் செய்த அளவை காட்டிலும், கூடுதல் அளவுக்கு அமைத்திருந்தால், அதற்கேற்ப கட்டணத்தை மாநகராட்சி நிர்வாகத்திற்கு செலுத்த வேண்டும் என, குறிப்பிட்டுள்ளோம். விரைவில், விளம்பர பதாகைக்குரிய கட்டணங்களை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ஆண்டுதோறும் விளம்பர நிறுவனங்கள் அனுமதி புதுப்பித்துக் கொள்வதால், விதிமீறலை ரத்து செய்ய முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.