மாற்று வழித்தடம் ஊர் பெயரால் கிராமப்புற பயணியர் குழப்பம்
காஞ்சிபுரம்: அரசு பேருந்துகளில், மாற்று வழித் தடத்தின் ஊர் பெயர் ஸ்டிக்கரால், கிராமப்புற பயணியர் இடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது. விழுப்புரம் கோட்டத்தில், காஞ்சிபுரம், உத்திரமேரூர், செங்கல்பட்டு, வேலுார் உள்ளிட்ட பல்வேறு மண்டலங்களின் கீழ், 576க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில், புறவழிச் சாலையில் செல்லும் விரைவு பேருந்துகள் மற்றும் அனைத்து நிறுத்தங்களிலும் நின்று செல்லும் சாதாரண பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை கோயம்பேடு முதல் காஞ்சிபுரம் வரை; காஞ்சிபுரம் முதல் தாம்பரம் வரை; காஞ்சிபுரம் முதல் செங்கல்பட்டு வரை; காஞ்சிபுரம் முதல் வேலுார்; காஞ்சிபுரம் முதல் திருச்சி; காஞ்சிபுரம் முதல் கும்பகோணம் என, பல்வேறு வழித்தடங்களில் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்து ஏறும் பயணியர் தெரிந்துக் கொள்வதற்கு சவுகரியமாக, வழித்தடங்களின் ஊர் பெயரை ஸ்டிக்கராக ஒட்டியுள்ளனர். இந்த ஸ்டிக்கர் ஒட்டிய பேருந்துகளை வேறு ஒரு வழித்தடத்திற்கு இயக்கும் போது, பேருந்துகளில் பயணம் செய்யும் கிராமப்புற பயணியர் இடையே குழப்பம் நிலவுகிறது. குறிப்பாக, சென்னையில் இருந்து, விழுப்புரம், பெரம்பலுார் வழியாக திருச்சி வரையில் இயக்கப்பட்டு வந்த பேருந்து, காஞ்சிபுரம் முதல் தாம்பரம் வரையில் இயக்கப்படுகிறது. பேருந்து பிடிக்க நினைக்கும் பயணியர், வேகமாக செல்லும் போது, சற்று குழப்பம் ஏற்படுகிறது. இதனால், பேருந்து தவறவிட வேண்டி உள்ளது. இதுகுறித்து, போக்குவரத்து அலுவலர் ஒருவர் கூறுகையில், சிறப்பு பேருந்துகள் இயக்கும் போது மட்டுமே, மாற்று வழித்தடம் பேருந்துகளை சில வழித்தடங்களில் இயக்குகிறோம். தினசரி வாடிக்கையாக இயக்கும் போது, ஸ்டிக்கரை அகற்றிவிட்டு இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.