உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / போக்குவரத்திற்கு லாயக்கற்ற 14 சாலைகளை சீரமைக்க... நிதி ஒதுக்கீடு :ரூ.16.35 கோடியில் பணியை துவக்கிய ஊரக வளர்ச்சி துறை

போக்குவரத்திற்கு லாயக்கற்ற 14 சாலைகளை சீரமைக்க... நிதி ஒதுக்கீடு :ரூ.16.35 கோடியில் பணியை துவக்கிய ஊரக வளர்ச்சி துறை

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், மோசமான நிலையில் உள்ள 27.81 கி.மீ., துார சாலைகளை சீரமைக்க, 14 பணிகளுக்கு நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு, 16.35 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, ஊரக வளர்ச்சி துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய உதவி கோட்டங்களை உள்ளடக்கிய காஞ்சிபுரம் நெடுஞ்சாலை துறை கோட்டங்கள் இயங்கி வருகின்றன.இவை அனைத்தும், கலெக்டர் அலுவலகம் பின்புற பகுதியில் இயங்கி வரும் நெடுஞ்சாலை துறை கோட்ட அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன.

சாலைகள் தேர்வு

கிராமப்புறங்களில் இருக்கும் சாலைகளில் வாகன பயன்பாடு அதிகரிப்பு மற்றும் நெரிசலை குறைக்கும் பொருட்டு, சாலை விரிவாக்கம் மற்றும் புதிய பாலம் கட்டும் பணிகளை நெடுஞ்சாலை துறையினர் செய்து வருகின்றனர்.தவிர, காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து ஒன்றியங்களில், 596 கி.மீ., துாரம் கிராமப்புற சாலைகள் மற்றும் 400 கி.மீ., துாரம் வட்டார வளர்ச்சி அலுவலகங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒன்றிய சாலைகள் என, மொத்தம் 996 கி.மீ., துாரம் சாலைகள் உள்ளன.ஒன்றிய கட்டுப்பாட்டில் 17 சாலைகள், கிராம ஊராட்சிகளில் 22 சாலைகள் என, 39 சாலைகளை சீரமைக்க 36.17 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இருப்பினும், பல சாலைகளை புதுப்பிக்க முடியாத நிலைக்கு நிதி பற்றாக்குறை ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் வகையில், நடப்பாண்டு முதல், மாநில மூலதன முதலீட்டிற்கான சிறப்பு நிதியின் கீழ் சாலைகளை தேர்வு செய்து புதுப்பிக்க உள்ளன.

நிர்வாக அனுமதி

அதன்படி காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய மூன்று ஒன்றியங்களிலும், 14 சாலைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.இந்த 27.81 கி.மீ., துாரம் சாலைகள் போடுவதற்கு, 16.35 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு, சமீபத்தில் நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:வாகனங்களின் பயன்பாடு அதிகரிப்பால், சாலை சேதம் ஏற்பட்டு குண்டும் குழியுமாக மாறி விடுகிறது. பல்வேறு திட்டங்களில் இந்த சாலைகள் செப்பனிடப்படுகின்றன. அந்த வரிசையில், நடப்பாண்டு முதல் மாநிலங்களின் மூலதன முதலீட்டு நிதியை ஒதுக்கீடு செய்து, சாலைகள் போடலாம் என புதிய வழிகாட்டி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுஉள்ளது.இதில், 14 சாலைகள் தேர்வு செய்யப்பட்டு நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. டெண்டருக்கு பின், சாலைகள் போட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !