உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ரூ.20 லட்சத்தில் நிழற்குடை

ரூ.20 லட்சத்தில் நிழற்குடை

ஸ்ரீபெரும்புதுார்:சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஸ்ரீபெரும்புதுார் ஐஸ்கூல் சந்திப்பில், ஸ்ரீபெரும்புதுார் நகராட்சி மூலம், 20 லட்சம் ரூபாய் மதிப்பில் பயணியர் நிழற்குடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. தேசிய நெடுஞ்சாலையில் நாளொன்றுக்கு லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. சென்னையில் இருந்து வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், ஓசூர், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் முதன்மை சாலையாக இந்த சாலை உள்ளது. இந்த சாலையில், ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து பிரிந்து, குன்றத்துார் மற்றும் ஒரகடம் வழியாக சிங்கபெருமாள் கோவில் பகுதிகளுக்கு செல்லும் ஐஸ்கூல் சந்திப்பில் பேருந்து நிறுத்தம் உள்ளது. ஸ்ரீபெரும்புதுார் சிப்காட் பகுதிகளில் இயங்கிவரும் 200க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகளுக்கு பணிக்கு செல்லும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள், இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி காஞ்சிபுரம் மற்றும் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து செல்கின்றனர். இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதுாரில் மிக முக்கிய பேருந்து நிறுத்தமாக விளங்கும் இங்கு, பயணியர் நிழற்குடை இல்லை. இதனால், பயணியர் வெயில், மழையில் சாலையோரம் கால் கடுக்க காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. இதையடுத்து, ஸ்ரீபெரும்புதுார் நகராட்சி மூலம், 20 லட்சம் ரூபாய் மதிப்பில், ஜஸ்கூல் சந்திப்பு அருகே, வி.ஆர்.பி., சத்திரம் பகுதியில் இருக்கை வசதியுடன் பயணியர் நிழற்குடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. பணிகள் நிறைவடைந்து அடுத்த மாதம், பயன்பாட்டிற்கு வரும் என, ஸ்ரீபெரும் புதுார் நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை