மேலும் செய்திகள்
வாலாஜாபாத் சார் பதிவாளர் அலுவலக சுற்றுச்சுவர் சீரமைப்பு
5 hour(s) ago
காஞ்சியில் பாரா வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டி
5 hour(s) ago
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறார் குற்றங்கள் ஆண்டுதோறும் அதிகரித்து வருவது, போலீசார் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2023 முதல் நடப்பாண்டு வரை, நான்கு ஆண்டுகளில், 214 சிறுவர்கள் பல்வேறு குற்ற வழக்குகளில் கைதாகியுள்ளது தெரியவந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், இரண்டு மகளிர் காவல் நிலையங்கள் உட்பட, 13 காவல் நிலையங்கள் உள்ளன. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொலை, கொள்ளை, வழிப்பறி, கடத்தல், போதைப் பொருட்கள் விற்பனை உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகின்றன. இவற்றில், போலீசார் விரைந்து விசாரித்து, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர். இத்தகைய குற்றங்களில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சிக்கி வருவது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை, கடத்தல் கடந்த ஆண்டு, காஞ்சிபுரம் சதாவரம் பகுதியில், 19 வயது இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டார். சிறுகாவேரிப்பாக்கத்தில் அரிசி ஆலை உரிமையாளரின் மகன் கடத்தப்பட்ட வழக்கில் கைதான ஐந்து பேரில், இருவர் சிறுவர்கள். கடந்த 2023 முதல் 2026 ஆகஸ்ட் வரை 214 சிறார்கள், பல்வேறு வகையான குற்ற வழக்குகளில் கைதாகியிருப்பது தெரியவந்துள்ளது. இது, சட்டம் - -ஒழுங்கை பாதுகாக்கும் போலீசாருக்கு புதிய தலைவலியாக உருவெடுத்துள்ளது. போதை பழக்கம் சிறார் குற்றங்களில் அதிகரிப்புக்கு, அவர்களின் மனநிலை, நண்பர்கள் வட்டாரம், குடும்ப சூழல் மற்றும் போதைப் பொருட்களின் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் முக்கிய பங்கு வகிப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நட்பு வட்டம் சரியாக இல்லாததே, சிறுவர்களை படிப்படியாக குற்றஞ்செயல்களில் ஈடுபட வழிவகுத்து விடுவதாக கூறப்படுகிறது. சிறுவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதை தடுக்க, பெற்றோர் தங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகளை கண்காணிப்பதுடன், அவர்களின் நட்பு வட்டத்தையும் கண்காணிக்க வேண்டும். பள்ளி மற்றும் கல்லுாரி அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, போதைப் பொருட்கள் பயன்பாட்டை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். ஆண்டுதோறும் அதிகரிப்பு காஞ்சிபுரம் மாவட்டத்தில், சிறுவர்கள் தொடர்புடைய குற்ற வழக்குகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவது, எதிர்காலத்தில் மேலும் தீவிரமான பிரச்னையாக மாறக்கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறார்களை குற்றச் செயல்களில் இருந்து மீட்டு, அவர்களுக்கு உரிய ஆலோசனை மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளை வழங்குவதுடன், குற்றச்செயல்களின் பின்னணியில் உள்ளவர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட குழந்தை பாதுகாப்பு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பள்ளிகளில் மாணவ - மாணவியருக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். குற்றவியல் சட்டங்களை அப்படியே கூறினால், அவர்கள் விரும்ப மாட்டார்கள். மாற்றாக, அவர்கள் விரும்பும் வகையில், சட்டம் பற்றிய தெளிவு, நடைமுறைகளை எடுத்து கூறியுள்ளோம். பள்ளியில் இடைநின்ற மாணவர்களை அடையாளம் கண்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளோம். குற்ற வழக்குகளில் இளைஞர் நீதி குழுமம் முன்பாக ஆஜர்படுத்தப்படும் சிறுவர்களின் வாழ்க்கைகாக, திறன் மேம்பாட்ட அளிக்க ஆலோசித்து வருகிறோம். அவ்வாறு அவர் கூறினார். ''சிறுவர்களை நல்வழிப்படுத்த, காவல் துறை சார்பில், 'பாய்ஸ் கிளப்' அமைத்து, மூன்று இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். பள்ளிகளிலும் மாணவர்களுக்கு, குழந்தை பாதுகாப்பு அதிகாரிகள், சமூக நலத்துறை அதிகாரிகள் போன்றவர்களும் விழிப்புணர்வு கொடுக்கின்றனர். சிறுவர்களின் குற்றங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. - அரவிந்த், எஸ்.பி., காஞ்சிபுரம்.
5 hour(s) ago
5 hour(s) ago