ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவப் பெருமாள் கோவில் சித்திரை திருவிழா ஏப்., 13ல் துவக்கம்
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவிலில், சித்திரை பிரம்மோத்சவ திருவிழா ஏப்., 13ம் தேதி துவங்க உள்ள நிலையில், கோவில் அலங்கார ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.முதல் பத்து நாட்கள் ஆதிகேச பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அதேபோல, அடுத்த பத்து நாட்கள் ராமானுஜர் உத்சவம் நடக்கும். வெகு கோலாகலமாக நடைபெறும் இந்த திருவிழாவில், தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்காக பக்தர்கள் பங்கேற்று, வடம் பிடித்து தேர் இழுத்து கொண்டாடுவார்கள்.இந்த ஆண்டு, சித்திரை மாத பிரம்மோத்சவ திருவிழா ஏப்., 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா ஏப்., 19ம் தேதி நடைபெற உள்ளது.இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர். முன்னதாக, கோவில் சுற்றுச்சுவர்களில் வர்ணம் பூசப்பட்டது.அதை தொடர்ந்து, தேர் வர்ணம் பூசும் பணி, கோவில் முன் அலங்காரம், பந்தக்கால் அலங்காரம் உள்ளிட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.அதை தொடர்ந்து, ஏப்., 23ம் தேதி முதல், மே 3ம் தேதி வரையில், ராமானுஜர் 1,008வது அவதார உற்சவம் நடைபெறும்.