வரதராஜ பெருமாள் கோவிலில் தவன உத்சவம் துவக்கம்
காஞ்சிபுரம், :காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் மூன்று நாட்கள் தவன உத்சவம் நடைபெறும். அதன்படி, நடப்பு ஆண்டுக்கான தவன உத்சவம் நேற்று துவங்கியது. உத்சவத்தையொட்டி நேற்று காலை 9:00 மணிக்கு தாயார் சன்னிதியில் இருந்து, கண்ணாடி அறைக்கு எழுந்தருளினார். அங்கு பெருமாள், தாயாருக்கு திருமஞ்சனம் நடந்தது.மாலை 6:00 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள சக்கரத்தாழ்வார் சன்னிதி பின்புறம் உள்ள தோட்ட உத்சவ மண்டபத்தில், பெருந்தேவி தாயார், ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.அங்கு சுவாமிக்கு திருவாராதனம், நிவேதனம், தீர்த்தம், சடாரி, துாப, தீப ஆராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தன. இரவு 7:30 மணிக்கு தோட்டத்தில் இருந்து பெருமாள், தாயார் புறப்பாடும், பத்தி உலாத்தல் நடந்தது.இரவு 8:00 மணிக்கு ஆழ்வார் பிரகாரமாக பெருமாள், தாயார் எழுந்தருளினர். தொடர்ந்து பெருமாள் கண்ணாடி அறைக்கும், தாயார், சன்னிதிக்கும் எழுந்தருளினர். தவன உத்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து மூன்று நாட்கள் நடக்கும் தவன உத்சவம் நாளையுடன் நிறைவு பெறுகிறது.