காஞ்சியில் 75 கோவில்களுக்கு நிதி ஒதுக்கீடு ரூ.1.87 கோடி டெண்டருக்கு பின் பணிகள் துவக்க துறையினர் முடிவு
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட ஹிந்து சமய அறநிலையத் துறையில், 25 கோவில்களில் ஒரு கால பூஜை செய்வதற்கு மற்றும் 50 கோவில்களில் புதுப்பிக்கும் பணிக்கு, 1.87 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. டெண்டருக்கு பின் கட்டுமானப் பணிகள் துவங்கும் என, அத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், 1,500க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. செயல் அலுவலர்கள் நிர்வகிக்கும் கோவில்களை தவிர, ஆய்வாளர்கள் கட்டுப்பாட்டில் கிராமக் கோவில்கள் உள்ளன.செயல் அலுவலர்கள் நிர்வகிக்கும் கோவில்களுக்கு நிலம் மற்றும் உண்டியல் காணிக்கையாக கிடைக்கும் வருவாய் கணிசமாக இருப்பதால், கோவில் பராமரிப்பு மற்றும் கட்டுமானத்திற்கு நிதி ஒதுக்கீடு எளிதாக கிடைக்கிறது. ஆய்வாளர் கட்டுப்பாட்டில் இருக்கும் பெரும்பாலான கோவில்கள் முறையாக பராமரிப்பு இன்றி சிதிலமடைந்து காணப்படுகிறது.குறிப்பாக, ஒரு கால பூஜை செய்வதற்கு கூட வருவாய் வழி இன்றி பல்வேறு கோவில்கள் பரிதவித்து வருகிறது. இதுபோன்ற கோவில்களை தேர்வு செய்து, ஒரு கால பூஜைக்கு முன்வைப்பு தொகையாக கோவில் பெயரில் வங்கி கணக்கில் முன்வைப்பு தொகை செலுத்தி, அதில் கிடைக்கும் வட்டி வருவாய் வாயிலாக கோவிலுக்கு ஒரு கால பூஜை உள்ளிட்ட செலவினங்கள் செய்துக்கொள்ளலாம் என, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஒரு கால பூஜைக்கு 25 கோவில்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. தலா, 2.50 லட்சம் என, மொத்தம், 62.50 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.இதுதவிர, கிராமப்புறங்களில் கேட்பாரற்று சிதிலமடைந்து இருக்கும் கோவில்களை புதுப்பிக்கும் பணிக்கு 30 கோவில்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தலா, 2.50 லட்சம் என, 75 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.அதேபோல, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தவர்கள் குடியிருக்கும் பகுதிகளில், 20 கோவில்கள் கட்டுவத்றகு தலா, 2.50 லட்சம் என மொத்தம், 50 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.ஒரு கால பூஜை கோவில்களுக்கு, 62.50 லட்சம்; கிராமப்புற கோவில்கள் கட்டுவதற்கு, 75 லட்சம்; ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தவர்கள் குடியிருப்புகளில் கோவில் கட்ட 50 லட்ச ரூபாய் என, 1.87 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.இந்த நிதி ஒதுக்கீடுகளின் வாயிலாக, ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் கேட்பாரற்று கிடக்கும் கோவில்களில் புதிய கட்டுமானம் மற்றும் ஒரு கால பூஜை நடக்காது கோவில்களில் ஒரு கால பூஜை நடக்கும் என, கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஒரு கால பூஜைக்கு முன் வைப்பு தொகை வழங்கப்பட்டு உள்ளது. இதுதவிர, கிராமப்புற கோவில்கள் மற்றும் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதிகளில் கோவில் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. டெண்டர் இறுதிபடுத்திய பின், பணிகள் துவக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
கோவில் இனங்கள் எண்ணிக்கை நிதி ஒதுக்கீடு லட்சம் ரூபாயில்
ஒரு கால பூஜை கோவில்களுக்கு நிதி ஒதுக்கீடு 25 62.50கிராமப்புற கோவில் கட்டுவதற்கு 30 75.00ஆதிதிராவிடர் வசிக்கும் பகுதிகளில் கோவில் கட்டுவதற்கு 20 50மொத்தம் 75 1.87 கோடி