வழிப்போக்கர் மண்டபத்தை இடிக்க திம்மராஜம்பேட்டை மக்கள் வலியுறுத்தல்
வாலாஜாபாத்:திம்மராஜம்பேட்டை சாலையோரம் ஆபத்தான நிலையில் உள்ள வழிப்போக்கர் மண்டபத்தை இடித்து அகற்ற வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வாலாஜாபாத் - காஞ்சிபுரம் சாலையில், கீழ்ஒட்டிவாக்கம் அடுத்து திம்மராஜம்பேட்டை உள்ளது. அப்பகுதி பேருந்து நிறுத்தம் எதிரே சாலை ஓரத்தில் பல ஆண்டுகளுக்கு முன் கட்டிய பழமையான வழிப்போக்கர் மண்டபம் உள்ளது.வாகன போக்குவரத்து அதிகம் இல்லாத காலகட்டத்தில் கட்டப்பட்ட இந்த மண்டபம், தற்போது மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. கட்டடத்தின் பல பகுதிகள் கான்கிரீட் பெயர்ந்துள்ளது.மண்டபத்தின் மீது பல வகையான செடிகள் வளர்ந்து, கட்டடத்தில் வேரிட்டு ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளது.மழைக் காலத்தில் கட்டடம் முழுக்க ஈரமாகி ஊறி போவதால், அச்சமயம் இடிந்து விழக்கூடும் என அப்பகுதி மக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்துகிறது.இதுகுறித்து, திம்மராஜம்பேட்டை பகுதி மக்கள் கூறியதாவது: கடந்த ஆண்டுகளில் சாலையில் வெகு துாரம் செல்லும் பயணியர், இந்த வழிப்போக்கர் மண்டபத்தில் தங்கி ஓய்வெடுத்து சென்றனர். பராமரிப்பின்மையால், தற்போது பயன்பாட்டிற்கு லாயக்கற்றதாகி விட்டது.தற்போதும் இச்சாலை வழியாக செல்வோர், சில நேரங்களில் இந்த மண்டபத்திற்குள் மழைக்கு ஒதுங்கி நிற்கின்றனர்.ஆபத்தான நிலையிலான பழுதான இந்த வழிப்போக்கர் மண்டபத்தை இடித்து அப்புறப்படுத்த, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.