உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாலை விரிவாக்கத்திற்கு அகற்றப்பட்ட கோவில் மீண்டும் கட்ட வலியுறுத்தல்

சாலை விரிவாக்கத்திற்கு அகற்றப்பட்ட கோவில் மீண்டும் கட்ட வலியுறுத்தல்

வாலாஜாபாத்:பழையசீவரத்தில் சாலை விரிவாக்கப் பணிக்காக அகற்றப்பட்ட அம்மன் கோவில் மீண்டும் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். வாலாஜாபாத் ஒன்றியம், பழையசீவரம் கிராமத்தில், பாலாற்றங்கரையொட்டி பழமை வாய்ந்த ஆற்றங்கரை அம்மன் கோவில் இருந்தது. கிராமத்திற்கு சொந்தமான இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாத விழா நடப்பது வழக்கம். பழையசீவரம் பகுதி மக்கள் ஆற்றங்கரை அம்மனை கிராம தேவதையாக வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் சென்னை - கன்னியாகுமரி சாலை திட்டத்தின் கீழ், காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலை விரிவாக்க பணி நடந்தது. அப்பணிக்காக ஆற்றங்கரை அம்மன் கோவில் இடித்து அகற்றப்பட்டது. அதற்கு மாறாக அதே பகுதியில் அக்கோவிலுக்கு சொந்தமாக மீதமுள்ள நிலத்தில் கோவில் கட்டப்படும் என அப்போது தெரிவிக்கப்பட்டது. தற்போது சாலை விரிவாக்கப் பணி முடிந்து ஓராண்டு கடந்தும் கோவில் கட்டுமானத்திற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாதது அப்பகுதி மக்கள் இடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து, பழைய சீவரம் கிராம மக்கள் கூறியதாவது: சாலை விரிவாக்கம் செய்வதற்காக பழையசீவரம் ஆற்றங்கரை அம்மன் கோவில் அகற்றப்பட்டது. அக்கோவில் அகற்றப்பட்ட பின் அந்நிலத்திற்கு மதிப்பீட்டுத் தொகையாக 23 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அத்தொகை ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளதாக தெரிகிறது. எனவே, கையகப்படுத்திய கோவில் நிலத்திற்கான மதிப்பீட்டு தொகையை கொண்டு, விரைவாக கோவில் கட்ட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !