4 மாதமாக திறக்காத நுாலகம் விச்சந்தாங்கல் வாசிகள் தவிப்பு
களக்காட்டூர்,காஞ்சிபுரம் ஒன்றியம், களக்காட்டூர் ஊராட்சி, விச்சந்தாங்கல் கிராமத்தில், 15 ஆண்டுகளுக்கு முன் நுாலகம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. இந்த நுாலகத்தை கிராமத்தினர் தினமும் நாளிதழை வாசிக்கவும், மாணவ - மாணவியர் பொது அறிவை வளர்த்து கொள்ளவும் பயன்படுத்தி வந்தனர்.மேலும், அரசு போட்டி தேர்வுக்கு தயாராகி வந்தவர்களும், குறிப்பு எடுக்கவும் உதவியாக இருந்து வந்தது.இந்நிலையில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், 2022 - -23ன் கீழ், 1.10 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டது. இருப்பினும், நான்கு மாதங்களுக்கு மேலாக நுாலகம் மூடியே கிடக்கிறது.இதனால், கிராமத்தினர் நாளிதழ் வாயிலாக தினசரி நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்ள முடியாமலும், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் தங்களது பொது அறிவுத்திறனை வளர்த்துக் கொள்ள இயலாத சூழலும் உள்ளது.லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து கட்டப்பட்ட நுாலக கட்டடம் மட்டுமின்றி, அதில் பல ஆயிரக்கணக்கான ரூபாய் செலவில் வாங்கி இருப்பு வைக்கப்பட்டுள்ள புத்தகங்களும் பயன்பாடின்றி வீணாகி வருகின்றன.எனவே, நுாலகத்தை திறக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விச்சந்தாங்கல் கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.