பயன்பாடற்ற அங்கன்வாடி மையத்தை அகற்ற வில்லிவலம் மக்கள் கோரிக்கை
வாலாஜாபாத்:வில்லிவலத்தில் பயன்பாட்டற்ற பழைய அங்கன்வாடி மைய கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்த அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட வில்லி வலம் கிராமத்தில் இயங்கி வந்த அங்கன்வாடி மையத்திற்கான கட்டடம் மிகவும் பழுதடைந்து இருந்தது. இதனால், அங்கன்வாடிக்கு புதிய கட்டட வசதி ஏற்படுத்த அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர். அதன்படி, அப்பகுதியில் புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு தற்போது இயங்குகிறது. இந்நிலையில், பயன்பாடற்ற பழைய அங்கன்வாடி கட்டடத்தை பருவ மழை தீவிரம் அடைவதற்குள் இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, வில்லி வலம் கிராம மக்கள் கூறியதாவது, கைவிடப்பட்ட அங்கன்வாடி மைய கட்டடம் மிகவும் பழமையானதாகும். அக்கட்டடத்தின் அருகாமையில் ரேஷன் கடை உள்ளிட்ட பொது கட்டடங்கள் செயல்படுகிறது. மேலும், அங்குள்ள காலி இடங்கள் அவ்வப்போது குழந்தைகள் விளையாட்டுக்கு பயன்படுத்தும் இடமாக உள்ளது. எனவே, இக்கட்டடத்தை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.