மாத்துார் சர்வீஸ் சாலையில் குழாய் உடைந்து குடிநீர் வீண்
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், மாத்துார் ஊராட்சியில், 2,000க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, நிலத்தடியில் குழாய் பதித்து வீடுகளுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.மாத்துார் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே, சாலைக்கு அடியில் செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, ஒரு மாதத்திற்கு மேலாக குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது.வீணாகி வரும் குடிநீர், சர்வீஸ் சாலையில் வழிந்து ஓடுவதால், அவ்வழியாக செல்லும் கனரக வாகனங்களால், சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறி வருகிறது.இதானல், சர்வீஸ் சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், விபத்தில் சிக்கும் சூழல் நிலவி வருகிறது. மேலும், தினமும் ஏராளமான லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், குழாய் உடைப்பை சரி செய்து, வீணாகுவதை தடுப்பதுடன். சேதமான சாலையையும் சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கினறனர்.