உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / 26 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5.83 லட்சம் நல உதவி வழங்கல்

26 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5.83 லட்சம் நல உதவி வழங்கல்

காஞ்சிபுரம், காஞ்சிபுரத்தில், வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 26 பயனாளிகளுக்கு 5.83 லட்சம் ரூபாய் மதிப்பில், நலத்திட்ட உதவிகளை, கலெக்டர் கலைச்செல்வி வழங்கினார். காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில், வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. இதில், பட்டா, உதவித்தொகை, ஆக்கிரமிப்பு, ரேஷன் அட்டை என, பல்வேறு கோரிக்கை தொடர்பாக, 439 பேர் மனு அளித்தனர். மனுக்களை பெற்ற கலெக்டர் கலைச்செல்வி, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி, உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில், ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 2024- - 25ம் கல்வியாண்டில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சமூக அறிவியல் பாடத்தில் மவுலிவாக்கம் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவி லீனா மற்றும் பூஜா ஆகியோர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றனர். அவர்களுக்கு பரிசு பொருட்கள், கல்வி உபகரணங்கள் அடங்கிய தொகுப்புகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் கலைச்செல்வி வழங்கினார். மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், ஈமச்சடங்கிற்கான செலவினம் மற்றும் இயற்கை மரணமடைந்த 26 மாற்றுத் திறனாளிகளின் வாரிசுதாரர்களுக்கு, 5.83 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிதியுதவிகள் வழங்கி, மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். அதை தொடர்ந்து சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் மாநில அளவில் மாணவ - மாணவியருக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. அதில், காஞ்சிபுரம் தாலுகாவிற்குட்பட்ட முசரவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி முதல் பரிசு பெற்றது. இரண்டாம் பரிசு குன்றத்துார் தாலுகாவிற்குட்பட்ட சிறுகளத்துார் அரசு உயர்நிலைப் பள்ளி பெற்றது. 1 லட்சம் மற்றும் 50,000 ரூபாய்க்கான காசோலைகளை கலெக்டர் கலைச்செல்வியிடம் மாணவ - மாணவியர் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை