குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மோசம் பயன்பாட்டிற்கு வருவது எப்போது?
அவளூர்:காஞ்சிபுரம் ஒன்றியம், அவளூர் ஊராட்சியில், ஊரக வளர்ச்சித்றை சார்பில், 20-20ம் ஆண்டு, 7.96 லட்சம் ரூபாய் செலவில், 1,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.இந்த இயந்திரத்தில், 5 ரூபாய் நாணயம் செலுத்தி, குழாய் வாயிலாக 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை அப்பகுதியினர் பிடித்து சென்றனர். இந்நிலையில், சுத்திகரிப்பு இயந்திரம் பழுதடைந்ததால், கடந்தாண்டு, குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டது.இதனால், அப்பகுதியினர் தனியார் கடைகளில், 25 ரூபாய் வரை செலவழித்து, தண்ணீர் கேன் வாங்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கான ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பயன்பாடின்றி வீணாகி வருகிறது.எனவே, குடிநீர் சுத்திகரிப்பு மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவளூர் கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து ஊரக வளர்ச்சி ஊராட்சி துறை அலுவலர் கூறுகையில், 'குடிநீரை சுத்திகரிப்பு செய்யும் இயந்திரம் பழுதடைந்துள்ளது. அதை பழுதுநீக்கம் செய்து விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.