புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பயன்பாட்டிற்கு வருவது எப்போது
காஞ்சிபுரம்:வாலாஜாபாத் ஒன்றியம், பூசிவாக்கம் ஊராட்சி, பாபாசாகிப்பேட்டையில், 25 ஆண்டுகளுக்கு முன், 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு, அப்பகுதியினருக்கு நிலத்தடியில் புதைக்கப்பட்ட குழாய் வாயிலாக குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், குடிநீர் தொட்டி கட்டப்பட்டு 25 ஆண்டுகளை கடந்துவிட்டதால், குடிநீர் தொட்டியின் துாண்களில் விரிசல் ஏற்பட்டு கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் உள்ளது.இதனால், சிதிலமடைந்த குடிநீர் தொட்டி எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் என்பதால், இதற்கு மாற்றாக புதிதாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்ட வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.இதையடுத்து, வாலாஜாபாத் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், பிரதான் மந்திரி ஆதர்ஷ் கிராம் யோஜனா 2023- - 24ம் ஆண்டு திட்டத்தில், 20 லட்சம் ரூபாய் செலவில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் பைப் லைன் அமைத்தல் பணி நடந்தது.மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணி முடிந்து ஆறு மாதங்களுக்கு மேலாகியும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் உள்ளது.இதனால், சிதிலமடைந்த நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆபத்தான நிலையில் உள்ள பழைய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இடிந்து விழுந்தால், அசம்பாவிதம் ஏற்படும் சூழல் உள்ளது.எனவே, புதிதாக கட்டப்பட்டு 6 மாதங்களுக்கு மேலாக பயன்பாட்டிற்கு வராமல் வீணாகி வரும், புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, பாபாசாகிப்பேட்டையினர் வலியுறுத்தி உள்ளனர்.