கடல் அரிப்பால் அச்சுறுத்தல் பாதுகாப்பு அரண் அமையுமா?
பழவேற்காடு,திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு மீனவப் பகுதியில், 35 மீனவ கிராமங்கள் உள்ளன.இதில் வங்காள விரிகுடா கடற்கரை பகுதியையொட்டி, கூனங்குப்பம் கிராமத்தில் துவங்கி, காட்டுப்பள்ளி வரை, 15 கிராமங்கள் உள்ளன.சமீப காலமாக புயல் அல்லாத நேரங்களிலும், பழவேற்காடு கடற்கரை பகுதிகளில், கடல் அலைகள் அதிக கொந்தளிப்புடன் காணப்படுவதால், கடல் அரிப்பும் அதிகமாக இருக்கிறது. இதனால், மீனவ மக்கள் அச்சத்திற்கு ஆளாகி உள்ளனர்.கடலுக்கும், மீனவ கிராமங்களுக்குமான இடைவெளி, 50 - 100 மீ., அளவில் இருக்கிறது. தொடரும் கடல் அரிப்பால், கடற்கரையோர கிராமங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது. கடல் அரிப்பை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.இதுகுறித்து மீன்வளத் துறை அதிகாரி கூறியதாவது:கடற்கரை பகுதிகளில் பாறைக் கற்கள் உள்ளிட்ட எந்தவொரு கடினமான பொருட்களையும் கொட்டக்கூடாது என, 2023ல், தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது. அதனால், துாண்டில் வளைவுகளுக்கு சாத்தியம் இல்லை.கடல் அரிப்பை தடுப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத மாற்று தடுப்பு அரண்கள் அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. பழவேற்காடு பகுதியில் கடற்கரையோர மீனவ கிராமங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அச்சம் அடைய தேவையில்லை.இவ்வாறு அவர்கூறினார்.