பாதியில் நிறுத்தப்பட்ட கட்டடம் அகற்றப்படுமா?
வாலாஜாபாத்:வாலாஜாபாத் பேரூராட்சியில், அம்பேத்கர் படிப்பகம் ஏற்படுத்த, 15 ஆண்டுகளுக்கு முன், அப்பகுதி ரயில்வே மேம்பாலம் அருகே கட்டடம் அமைக்கும் பணி பேரூராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டது.கட்டடத்திற்கான தளம் போடும் பணி நிறைவு பெற்றதையடுத்து, ஆட்சி மாற்றம் மற்றும் நிர்வாக சீர்கேடு உள்ளிட்ட காரணங்களால் அப்பணி பாதியில் நிறுத்தப்பட்டது.அதை தொடர்ந்து அடுத்தகட்டப் பணி மேற்கொள்ளாத நிலையில், அக்கட்டடம் தற்போது வலுவிழந்து இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது.இதனிடையே பயன்பாடு இல்லாமல் கேட்பாரற்ற இக்கட்டடத்தில், சமீப காலமாக இரவு மற்றும் பகல் நேரங்களிலும் சமூக விரோத செயல்கள் அரங்கேறி வருவதாக அப்பகுதிவாசிகள் புகார் கூறி வருகின்றனர்.மதுபிரியர்கள் மற்றும் காதலர்களின் மறைவிடமாக இக்கட்டடம் பயன்படுவதாக கூறப்படுகிறது.எனவே, சமூக விரோதிகளின் கூடாரமாகி வரும் பயன்பாடற்ற இந்த பழைய கட்டடத்தை அகற்றம் செய்து, அந்த இடத்தை பயனுள்ள வகையில் பராமரிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.