உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  பட்டா இடத்தை பறிக்கும் தி.மு.க., நிர்வாகி :கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் தர்ணா

 பட்டா இடத்தை பறிக்கும் தி.மு.க., நிர்வாகி :கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் தர்ணா

காஞ்சிபுரம்: பட்டா இடங்களை தி.மு.க., நிர்வாகி பறிப்பதாக கூறி, காஞ்சிபுரம் கலெக்டர் வளாகத்தில், பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாக கூட்டரங்கில், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. இதில், பட்டா, பட்டா திருத்தம், ஆக்கிரமிப்பு, உதவித்தொகை, ரேஷன் அட்டை என, பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக, 208 பேர் மனு அளித்தனர். மனுக்களை பெற்ற கலெக்டர் கலைச்செல்வி, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி, உரிய நடவடிக்க எடுக்க அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில், வாலாஜாபாத் தாலுகாவைச் சேர்ந்த 58 குடும்பத்தினர், ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவைச் சேர்ந்த 13 குடும்பத்தினர் என, மொத்தம் 71 பழங்குடியின குடும்பத்தினருக்கு, தாயுமானவர் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைகளை, கலெக்டர் கலைச்செல்வி வழங்கினார். கூட்டரங்கு வெளியே, ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவில் உள்ள கண்ணந்தாங்கல் கிராமத்தில், தி.மு.க., நிர்வாகி, தங்களது பட்டா இடங்களை ஆக்கிரமித்துள்ளதாக பெண்கள் ஏழு பேர், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கலெக்டரின் பாதுகாப்பு போலீசார், அலுவலக உதவியாளர் சமாதானம் செய்தும், அங்கிருந்து அவர்கள் செல்லவில்லை. மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், கூட்டரங்கு வெளியே வந்து, பெண்களை அழைத்து பிரச்னை பற்றி கேட்டறிந்தார். கண்ணந்தாங்கல் கிராமத்திற்கு நாளை நேரில் வந்து ஆய்வு செய்து, நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து, அங்கிருந்து பெண்கள் புறப்பட்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ