வேளாண் கருவி கண்டுபிடிப்பு போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்
காஞ்சிபுரம்:வேளாண் கருவிகளை கண்டறியும் போட்டிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, வேளாண் துறை அறிவித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் கிருஷ்ணவேணி வெளியிட்ட அறிக்கை: மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தில், வேளாண் கருவிகளை கண்டறியும் மூன்று நபர்களுக்கு, சிறப்பு பரிசு வழங்கப்பட உள்ளன. முதல் பரிசாக, 2.5 லட்சம் ரூபாய்; இரண்டாம் பரிசாக 1.5 லட்சம் ரூபாய்; மூன்றாவது பரிசாக ஒரு லட்சம் ரூபாய் என, தனித்தனி பரிசு வழங்கப்பட உள்ளது. இதில், விவசாயிகள், கூலித்தொழிலாளர்கள், கிராமம் மற்றும் நகர்ப்புற இளைஞர்கள் என, பல தரப்பினர் பங்கேற்கலாம். இந்த போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் நுழைவுக்கட்டணமாக, 150 ரூபாய் செலுத்தி உழவன் செயலி மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும், உரிய ஆவணங்களை அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மைய உதவி இயக்குநரிடம் சமர்ப்பிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.