மேலும் செய்திகள்
பயணிகள் நிழற்குடை சீரமைக்கப்படுமா?
11-Jun-2026
அரவக்குறிச்சி:அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம் அருகே, பழுதடைந்துள்ள பயணிகள் நிழற்கூடத்தை சீரமைக்க வேண்டும்.அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம் முன்பாக, அமைந்துள்ள பயணிகள் நிழற்கூடம் பல மாதங்களாக பயன்பாடின்றி கிடப்பதால், பொதுமக்கள் சுட்டெரிக்கும் வெயிலிலும், மழையிலும் சாலையோரம் நின்று பஸ்களில் ஏறும் நிலை நீடித்து வருகிறது. அருகிலேயே அரசு மருத்துவமனை உள்ளதால், நுாற்றுக்கணக்கான மக்கள் பல்வேறு தேவைகளுக்காக பயணிகள் நிழற்கூடத்துக்கு வருகின்றனர். இவர்களின் வசதிக்காக தாலுகா அலுவலகம் முன்பாக நிழற்கூடம் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு நிழற்கூடத்தின் மேற்கூரை பழுதடைந்தது. இதையடுத்து, பழுதடைந்த தகடுகள், ஓடுகளை அகற்றிய ஊழியர்கள், அவற்றை அப்புறப்படுத்தாமல் நிழற்கூடத்தின் உள்ளேயே வைத்துள்ளனர். இதன் காரணமாக, பொதுமக்கள் யாரும் உள்ளே சென்று அமரவோ, நிற்கவோ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.அரசு அலுவலகங்கள் சூழ்ந்த முக்கிய பகுதியில், நிழற்கூடம் பாழடைந்து கிடப்பது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, பழுதடைந்த நிலையில் உள்ள நிழற்கூடத்தை சீரமைத்து, மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
11-Jun-2026