பக்தர்கள் பால்குட ஊர்வலம்
குளித்தலை:குளித்தலை அடுத்த ராஜேந்திரம் கிராமம், தேவேந்திரகுல தெருவில் மகா மாரியம்மன், மகா காளியம்மன், பாலக்கட்டாயி, மலையாள சுவாமி, மல்லாண்டவர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் திருவிழாவை முன்னிட்டு, நேற்று காலை, 10:00 மணிக்கு, ராஜேந்திரம் காவிரி ஆற்றில் இருந்து பொதுமக்கள், பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்தும், குழந்தைகளை கரும்பு தொட்டிலில் துாக்கிக்கெண்டும், மேளதாளம் முழங்க, மலையாள சுவாமி, மதுரைவீர சுவாமி கோவிலை சுற்றி முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக சென்றனர்.தொடர்ந்து, தீர்த்தங்களை அம்மனுக்கு ஊற்றி, சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்தனர். விழாக்குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு, காவிரி ஆற்றில் இருந்து கரகம் பாலித்து, முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது. இன்று காலை, சுவாமிக்கு கிடா வெட்டுதல், மதியம், அம்மனுக்கு பொங்கல் வைத்தல், இரவு, மாவிளக்கு பூஜை, வாணவேடிக்கையும், அதை தொடர்ந்து அரண்மனைக்கு கிடா அழைத்து வருதல், காளியம்மனுக்கு எருமைக்கிடா வெட்டுதல், இரவு, 11:00 மணிக்கு சுவாமி காவிரி ஆற்றுக்கு சென்றடைதல், தொடர்ந்து மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது.நாளை காலை, 8:00 மணிக்கு, விடையாற்றி அபிஷேகம், ஆராதனை, அன்னதானம் நடக்கிறது.