தேவையற்ற செயலிகளை பதிவிறக்கம் :செய்யக்கூடாது: கரூர் எஸ்.பி., அறிவுரை
கரூர்;''மொபைல் போனில் தேவையற்ற செயலிகளை பதிவிறக்கம் செய்யக்கூடாது,'' என, எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்தார்.கரூர் மாவட்ட, சைபர் கிரைம் போலீஸ் சார்பில், திருட்டு போன மொபைல் போன் ஒப்படைப்பு நிகழ்ச்சி, எஸ்.பி., அலுவலகத் தில் நேற்று நடந்தது. அதில், ஆன் லைன் மூலம் பணத்தை இழந்த, 27 பேருக்கு, 73 லட்ச ரூபாய்க்கான செக் மற்றும், 208 பேருக்கு, 50 லட்ச ரூபாய் மதிப்பிலான திருட்டு போன மொபைல் போன்களை வழங்கிய எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா பேசியதாவது:சைபர் கிரைம் குற்றங்கள், உலக அளவில் விரிவடைந்துள்ளது. ஆன்லைன் மூலம் வேலை தேடுவோர், தொழில் முனை வோர், வெளிநாடுகளில் வேலை, கல்வி ஆகியவற்றை தேடுவோர்களை, குறி வைத்து ஆன்லைன் குற்றங்கள் அதிகளவில் நடக்கிறது. ஆன்லைன் மூலம், பணத்தை இழந்தால், 1930 என்ற எண்ணிலும், சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷனிலும் உடனடியாக புகார் செய்ய வேண்டும். மொபைல் போன் என்பது, தனி நபரின் தகவல்கள் உள்ள, பொருளாக மாறி விட்டது. அதை பத்திரமாக வைத்து கொள்ள வேண்டும். தவறினால், தொலைந்து போன மொபைல் மூலம், யாராவது சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டால், அதன் உரிமையாளரை தான் முதலில் பாதிக்கும். பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் மொபைல் போனை, கவனத்துடன் கையாள வேண்டும். மொபைல் போனில், தேவையற்ற செயலிகளை பதிவிறக்கம் செய்யக்கூடாது. இவ்வாறு, அவர் பேசினார்.அப்போது, ஏ.டி.எஸ்.பி., பிரபாகரன், சைபர் கிரைம் போலீஸ் எஸ்.ஐ., க்கள் சுதர்சனன், லலிதா மற்றும் போலீசார் உடனிருந்தனர்.