பயணிகள் நிழற்கூட முறைகேடு; நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
கரூர்: கரூர் மாவட்ட பா.ஜ., பொதுச்செயலாளர் நவீன்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: கரூர் எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் ஆகிய இடங்களில், 2019 முதல், 2024 வரை, 1.35 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 16 இடங்களில் பயணிகள் நிழற்கூடம் கட்டப்பட்டது. இதில், 15 நிழற்கூடத்திற்கு தலா, 8 லட்சம் ரூபாய் மதிப்பிலும், ஒரு நிழற்கூடம், 15 லட்சம் ரூபாய் மதிப்பிலும் கட்டப்பட்டுள்ளது. நிழற்கூடங்களுக்கு, சந்தை மதிப்பை விட கூடுதலாக செலவு செய்துள்ளனர். தரமான கட்டுமான பொருட்களை வைத்து கட்டியதாக தெரியவில்லை. நிழற்கூடங்களின் கட்டுமானத்தில் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பு உள்ளது.கட்டுமானங்களை முறையாக ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜன., 7ல், கரூர் கலெக்டர் தங்கவேலிடம் மனு அளிக்கப்பட்டது. ஊரக வளர்ச்சி துறையினர் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கரூர், தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு கரூர் உதவி செயற்பொறியாளர், அரவக்குறிச்சி, க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்கு குளித்தலை உதவி செயற் பொறியாளர், கிருஷ்ணராயபுரம், கடவூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு, குளித்தலை உதவி செயற்பொறியாளர்.கரூர் மாநகராட்சிக்கு செயற்பொறியாளர், புகழூர் நகராட்சிக்கு பொறியாளர், கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்.,க்கு திண்டுக்கல் பேரூராட்சி துறை மண்டல உதவி செயற்பொறியாளர் ஆகியோர் மூன்று நாட்களுக்குள் ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கலெக்டர் தங்கவேல் ஜன.,13ல் உத்தரவிட்டார். ஆனால், இரு மாதங்களாகியும் தற்போது வரை யாரும் விசாரணை நடத்தியதாக தெரியவில்லை. உரிய பதில் வழங்காத, அரசு பொறியாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.