மேலும் செய்திகள்
அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்
23-Oct-2024
கரூர்: கரூரில், அ.தி.மு.க., கொடி கட்ட போலீசார் எதிர்ப்பு தெரிவித்ததால், பரபரப்பு ஏற்பட்டது.கரூர், திருகாம்புலியூர் ரவுண்டானா பகுதியில் உள்ள, தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் காலை, மாநில தி.மு.க., மாணவரணி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. அதில், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மாணவரணி செயலாளர் எம்.எல்.ஏ., எழிலரசன் ஆகியோர் பங்கேற்றனர். அதற்காக, ரவுண்டானா மற்றும் திருமண மண்டப சாலையில், தி.மு.க., கொடிகள் கட்டப்பட்டிருந்தன. நிகழ்ச்சி முடிந்த நிலையில், தி.மு.க., கொடிகள் அகற்றப்படவில்லை.இந்நிலையில், நேற்று காலை மற்றும் மாலையில் அதே திருமண மண்டபத்தில், அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்காக, நேற்று அதிகாலை, 12:00 மணிக்கு திருகாம்புலியூர் ரவுண்டானா மற்றும் திருமண மண்டப சாலையில், அ.தி.மு.க., கொடிகள் கட்டும் பணியில் நிர்வாகிகள் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, அ.தி.மு.க., கொடிகளை கட்ட கூடாது என, கரூர் டவுன் போலீசார் நிர்வாகிகளை மிரட்டினர். இதுகுறித்து, தகவலறிந்த மாவட்ட, அ.தி.மு.க., செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர், சம்பவ இடத்துக்கு சென்று, போலீசாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இரண்டு முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்க உள்ள, அ.தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டத்தை, கொடி கட்டாமல் நடத்த முடியுமா? நான் உங்கள் எஸ்.பி.,யிடம் பேசிவிட்டேன் என, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலளித்தார். இதையடுத்து, கரூர் டவுன் போலீசார் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதனால், கரூர் ரவுண்டானா பகுதியில், நேற்று அதிகாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
23-Oct-2024