முப்பெரும் விழாவை முன்னிட்டு தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டம்
கரூர் :கரூரில், வரும், 17ல், தி.மு.க., முப்பெரும் விழா தொடர்பாக கரூர் சட்டசபை தொகுதி செயல் வீரர்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. மாவட்ட செயலரும், கரூர் எம்.எல்.ஏ.,மான செந்தில்பாலாஜி தலைமைவகித்து பேசியதாவது:கரூர் மாவட்டத்திற்கு வேளாண் கல்லுாரி, மீன் அங்காடி உள்பட பல்வேறு திட்டங்களை தமிழக அரசு வழங்கி இருக்கிறது. இதுமட்டுமல்லாது, சாலை, வடிகால் வசதி உள்பட எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்தனை திட்டங்களை அளிக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு, வரும் சட்டசபை தேர்தலில், நான்கு தொகுதிகளில் தி.மு.க., வெற்றியை பரிசாக அளிக்க வேண்டும். கரூரில் வரும், 17ல் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாள் விழா, ஈ.வெ.ரா. பிறந்த நாள் விழா, தி.மு.க., தொடக்க நாள் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழா நடத்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த விழாவை சிறப்பாக நடத்த வேண்டும். இவ்வாறு, அவர், பேசினார்.கூட்டத்தில், எம்.எல்.ஏ.,க்கள் இளங்கோ, சிவகாமசுந்தரி, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன், மாநகர செயலர் கனகராஜ், மாநகர பகுதி செயலர் குமார், ஜோதிபாசு, பாண்டியன், ஒன்றிய செயலர்கள் பாஸ்கரன், வேலுசாமி, முத்துக்குமாரசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.