கரூர் அரசு கலைக்கல்லுாரியில் முதல் கட்ட கலந்தாய்வு நிறைவு
கரூர்:கரூர் அரசு கலைக்கல்லுாரியில், முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான, முதல் கட்ட கலந்தாய்வு நேற்று நிறைவு பெற்றது. கரூர் அரசு கலைக்கல்லுாரியில், 18 பிரிவுகளை சேர்ந்த, 1,485 இடங்களுக்கான இளநிலை படிப்புகளுக்கான (2025-26) கலந்தாய்வு கடந்த, 2ல் தொடங்கியது. அதில், சிறப்பு பிரிவுகளான என்.சி.சி., முன்னாள் படை வீரர்களின் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வு நடந்தது. தொடர்ந்து கடந்த, 4 முதல் நேற்று வரை பி.ஏ., தமிழ் மற்றும் ஆங்கிலம், பி.காம்., பி.காம்., சி.ஏ., பி.பி.ஏ., பி.ஏ., வரலாறு மற்றும் பொருளாதாரம், பி.எஸ்.சி., பாடப் பிரிவுகளுக்கும் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.அதில், தேர்வு பெற்ற மாணவ, மாணவியருக்கு முதலாமாண்டு சேர்க்கைக்கான ஆணைகளை கல்லுாரி முதல்வர் ராதா கிருஷ்ணன் வழங்கினார். முதல் கட்ட கலந்தாய்வு கூட்டம், நேற்று நிறைவு பெற்றது. காலியாக உள்ள, இடங்களுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு கூட்டம், விரைவில் தொடங்கும் என, பேராசிரியர்கள் தெரிவித்தனர்.